கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம்: அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்
அண்ணாமலையார் கோயிலில்கார்த்திகை தீபத் திருவிழாவைஒட்டி மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதிவிழா தொடங்கி 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம், 7-ம் நாள் உற்சவத்தன்று நடைபெறும். இதில் பராசக்தி அம்மன் திருத்தேரை, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பர். இத்தகைய பிரசித்திப் பெற்ற மகா தேரோட்டம், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாட வீதியில் நடைபெறவில்லை. அதற்கு மாற்றாக கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.
விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் (பஞ்ச மூர்த்திகள்) 5 திருத்தேர்களில் தனித்தனியே எழுந்தருளிபக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து, 5-ம் பிரகாரத்தில் 5 ரதங்களும் பவனி வந்தன. அப்போது கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா’ என முழங்கி, தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.
8-ம் நாள் உற்சவமான, இன்று (17-ம் தேதி) காலை விநாயகர், சந்திரசேகரர் உற்சவமும் மாலை 4 மணிக்கு பிட்சாண்டவர் உற்சவமும், இரவு நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் உற்சவமும் நடைபெற உள்ளன. நாளை (18-ம் தேதி) காலை 9-ம் நாள் உற்சவமான விநாயகர், சந்திரசேகரர் உற்சவமும், இரவுபஞ்ச மூர்த்திகளின் உற்சவமும் நடைபெறும்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீப தரிசனம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். அதற்கு முன்பாக, தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி ஆணும் பெண்ணும் சமம் என்பதை எடுத்துரைக்கும் வகையில், ‘அர்த்தநாரீஸ்வரர்’ காட்சி கொடுப்பர்.
குழந்தை வரம் கேட்டு அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொண்டவர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், கரும்பு தொட்டிலை சுமந்து வந்து மாட வீதியில் வலம் வந்து வேண்டுதலை நிறைவு செய்வர். இந்நிகழ்வானது, தேரோட்டம் நடைபெறும் நாளில் சிறப்பு பெற்றதாகும். இதையொட்டிகரும்பு தொட்டில் அமைத்து, குழந்தை அல்லது சிறுவர்களை அதில் உட்கார வைத்து மாடவீதியில் வலம் வந்த ஆயிரக்கணக்கான தம்பதிகள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.