‘பத்து நாட்களில் கோவில்களை திறக்காவிட்டால், அரசை ஸ்தம்பிக்கச் செய்வோம்,” என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழகத்தில், வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமை உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் கோவில்களை திறக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், நேற்று மாநிலம் முழுதும் உள்ள முக்கிய கோவில்கள் முன் போராட்டம் நடந்தது.சென்னை, மண்ணடி காளிகாம்பாள் கோவில் அருகே நடந்த போராட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் உட்பட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அதில், பா.ஜ.,வினர் தீச்சட்டி ஏந்தியும், தேங்காய் உடைத்தும், கோவில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.பின், அண்ணாமலை அளித்த பேட்டி:ஆளுங்கட்சியின் நல்ல விஷயங்களுக்கு, எதிர்க்கட்சியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.அவர்கள் சித்தாந்தத்தை, கோவில் மற்றும் பூஜை அறைகளில் திணிக்க முயலும் போது; இல்லாத கொரோனாவை காரணம் காட்டி, நம் உரிமையை மறுக்கும் போது, மக்கள் போராட்டமாக நடத்த வேண்டிய கட்டாயம் பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
எதிர்கட்சியாக இருந்த போது, கொரோனாவை காரணம் காட்டி, ‘டாஸ்மாக்’ கடைகள் வேண்டாம் என்ற தி.மு.க., ஆளுங்கட்சியான பின், புயல் வேகத்தில் கடைகளை திறந்தது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கும் என்றனர். தற்போது, மத்திய அரசு வழிமுறைகளை காரணம் காட்டுவது முற்றிலும் பொய். தேவைப்படும் போது அறிவுறுத்தல்களை ஏற்பதும், தேவையில்லாத போது மத்திய அரசை விமர்சிப்பதும், தி.மு.க.,விற்கு கைவந்த கலை.கடவுள் இல்லை; கடவுளை கும்பிடுபவர்கள் முட்டாள் என்பது தான் தி.மு.க.,வின் சித்தாந்தம். அதை மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் புகுத்த முற்படுகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு தடை போட்டனர்.
தற்போது, வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில், கோவில்களை மூடியுள்ளனர்.கோவில்கள் மட்டுமின்றி, மசூதி, தேவாலயங்களையும் திறக்க வேண்டும். மக்கள் குரலுக்கு செவி சாய்க்காவிடில், ௧௦ நாட்களுக்கு பின், அரசே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும்.குளிர்சாதன வசதியுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன; அதன் வழியே கொரோனா பரவும். தியேட்டருக்கு போய் படம் பாருங்கள் என உதயநிதி எம்.எல்.ஏ., சமூக வலைதளங்கள் வாயிலாக சொல்கிறார். இதற்கு, அரசு வெட்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.