தமிழகம்

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

59views

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில் இஓஎஸ்-4 (ரிசாட்-1ஏ) மற்றும் இஓஎஸ்-6 (ஓசோன் சாட்-3) ஆகிய 2 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, முதல் சிறிய வகை ராக்கெட் (எஸ்எஸ்எல்வி) மூலமாக இஓஎஸ்-2 என்ற மைக்ரோசாட் செயற்கைக் கோளும் செலுத்தப்பட உள்ளது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் ஏவப்படும் செயற்கைக் கோளின் செயல்பாடு தகுதிகுறித்து பல்வேறு கட்ட சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த 3 செயற்கைக் கோள்களும் விவசாயம், உள்நாட்டு விவகாரங்கள், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இவை இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் அதன் எல்லைப் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கும். தெற்காசிய கடல் பகுதிகளில் கப்பல்கள், போர் விமானங்கள் ஊடுருவல் உள்ளதா என எதிரிகளின் நடமாட்டத்தை கணித்துக் கூறும். பேரிடர் மேலாண்மை, விவசாயம், காடுகள் பாதுகாப்புக்கு பயன்படும்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது:

விண்வெளி துறையில் தொழில்நுட்பத்தின் இறக்குமதியை குறைப்பதற்கான முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. அதற்காக பல்வேறு சீர்திருத்தங்களை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு, புவியை கண்காணிக்கும் 3 முக்கிய செயற்கைக் கோள்களை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. அதாவது, செயற்கைக் கோள்களை கண்காணிப்பது, தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக பயன்படும் கருவி (டி.ஆர்) மற்றும் முக்கியமான பாகங்களில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், செயற்கைக் கோள்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து கண்டுபிடிக்க விரிவான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்படும். விண்வெளி துறையில் இஸ்ரோ தொடங்கியுள்ள சீர்திருத்தங்களின் பயனாக இஓஎஸ்-4 பயணம் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!