தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை முதல் 4-ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக அக்.1 முதல் 4-ம் தேதிதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டாமாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 1-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், 2, 3, 4 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அக்.2 முதல் 4 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரியில் 39 செமீ மழைபதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 33 செமீ மழை பதிவாகும். இந்த ஆண்டு வழக்கத்தை விட இது 17 சதவீதம் அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.