மின்வாரியம் இதுவரை இல்லாத அளவாக மிக அதிகபட்சமாக 3,203 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் கிடைத்து வருகிறது. அத்துடன், மத்திய அரசும் சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க மாநில அரசுகளை ஊக்கப்படுத்தி வருகிறது.
இதனால், பல நிறுவனங்கள் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க ஆர்வம் செலுத்தி வருகின்றன.
தற்போது, தமிழகத்தில் 4,200 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளன. இதுதவிர, தனிநபர்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளிலும் சூரியத் தகடுகளை அமைத்து மின்னுற்பத்தி செய்கின்றனர்.
தனியார் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு மின்வாரியம் கொள்முதல் செய்து வருகிறது.
மழைக் காலங்களை தவிர்த்து,ஏனைய நாட்களில் நாள்தோறும் 2,500 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்கிறது.
கடந்த பிப்.10-ம் தேதி மிக அதிகபட்சமாக 3,152 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவே, இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட அதிகபட்ச மின்சாரம் ஆகும்.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதியன்று மின்வாரியம் 3,203 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்தது. இதுவே இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட அதிகபட்ச சூரியசக்தி மின்சாரம் ஆகும். தேவைப்பட்டால் இன்னும் அதிகளவு கொள்முதல் செய்ய மின்வாரியம் தயாராக உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.