129
மிகச்சரியாக 120ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு ஆவணம் இந்தக் கல்யாணப் பத்திரிக்கை.ஆம் 150வது பிறந்த நாளைக் கொண்டாடும் பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்களின் திருமணப் பத்திரிக்கைதான் இது.
இந்தப் பத்திரிக்கையில் மாப்பிள்ளையின் பெயர்,பெண்ணின் பெயர்,மாப்பிள்ளையின் அப்பா,மணப்பெண்ணின் அப்பா பெயர்கள் மட்டுமே இருக்கின்றன.பெண்ணுடைய,மாப்பிள்ளையுடைய அம்மாக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.120வருடங்களுக்கு முன் பெண்களின் பெயரை பத்திரிக்கைகளில் போடுகின்ற பழக்கம் இல்லை என்று தெரிகிறது.
அடுத்து வ.உ.சிதம்பரம்பிள்ளையும் அவருடைய அப்பாவும் பிரபலமான வக்கீல்கள்.ஏராளமான வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டிருப்பார்கள் யாருடைய பெயரும் இல்லை.பெரியவரின் பெயருக்கு முன்னால் “கவிராஜர்”என்று குறிப்பிட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இலக்கியப் பங்களிப்பு அனேகம் பேருக்கு தெரியாது.தமிழ் இலக்கியத்திற்கு பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார்.
நாம் இப்போது திருமணப்பத்திரிக்கைகளில் தாத்தா பாட்டி,அப்பா அம்மா ஆகியோரைக் குறிப்பிட்டு மூன்றாவது தலைமுறையாக மணமக்களை குறிப்பிடுகிறோம்.காலம் மாறியிருக்கிறது.
அப்புறமாக இந்தப் பத்திரிக்கையில் மறுநாள் நடக்கும் “பட்டிணப்பிரவேசத்தில்”என்று ஒரு பழக்கத்தை குறிப்பிடுகிறார்கள்.இந்த தலைமுறைக்கு இவ்வார்த்தை புதுசாக இருக்கலாம்.திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு என்று மாற்றி விட்டோம்.அந்தக் காலத்தில் திருமணம் முடிந்த பின்னால் மறுநாள் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மணமக்களை உட்கார வைத்து ஊர் முழுக்க சுற்றி வருகிற பழக்கத்திற்குப் பெயர்தான் பட்டிணப் பிரவேசம்.
நாம் இப்போது சரஞ்சரமாக பட்டாசு கொளுத்தி அமர்க்களம் பண்ணுகிறோம்.அக்காலத்தில் பட்டாசு கிடையாது.ஆகவே பிடாரண் என்று சிலர் இருப்பார்கள்.பெரிய்ய மரக்கட்டைகளில் இரும்புக் குழாய்களைப் பதித்து வைத்து அதில் கருமருந்துகளை கிட்டித்து வேட்டு போடுபவர்கள்.அவர்களையும் அந்த வெடி போடுகிற சாதனத்தையும் வண்டிபோட்டுப் போய் கூட்டிக்கொண்டு வருவார்கள்.அந்த வெடிச்சத்தம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் கேட்கும்.
பஞ்சாலைகளைப் பற்றிய என்னுடைய அடுத்த நாவலுக்கான தேடலின் போது பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்கள் 1908ல் நடத்திய தூத்துக்குடி கோரல் மில் போராட்ட வரலாற்றைப் படித்த போது மிரண்டு போனேன்.திருமணமாகிய ஏழே ஆண்டுகளில் மாபெரும் போராட்டம் நடத்தி சிறை செல்கிறார்.நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது.
அந்தப் போராளி பெரியவரின் புகழ் ஓங்குக.நானும் ஒரு பஞ்சாலை தொழிலாளிதான்.அடுத்த நாவலில் பெரியவரின் போராட்டத்தை மிகவும் விஸ்த்தாரமாகப் பதிவு பண்ணுவேன்.
வாழ்க பெரியவர் புகழ்.வளர்க அவருடைய தியாகம்.
நன்றி : சோ.தர்மன்