சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்: அரசின் அறிவிப்புக்கு பக்தர்கள் வரவேற்பு
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறி விக்கப்பட்டுள்ளதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழகத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அடுத்ததாக அதிக அளவில் பக்தர்கள் வருகை மற்றும் அதிக உண்டியல் காணிக்கையில் சமயபுரம் கோயில் 2-ம் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் ரங்கம் ரங்கநாதர் கோயில், பழநி தண்டாயுதபாணி கோயில் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை 13.09.2012-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தற்போது வரை நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, பக்தர்கள் அதிக அளவில் வரும் சமயபுரம் கோயிலிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில், சட்டப்பேரவை யில் நேற்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பி.கே.சேகர் பாபு, திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோயில்களில் செப்.17-ம் தேதி முதல் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்கப்படும் என அறிவித் துள்ளார். இதேபோல, பழநி தண்டாயுதபாணி கோயில், சமய புரம் மாரியம்மன் கோயில், ரங்கம் ரங்கநாதர் கோயில் உள்ளிட்ட 10 முக்கிய கோயில்களில் பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரி வித்துள்ளனர்.
இதுகுறித்து சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தற்போது தினந்தோறும் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதை 2,000 பேருக்கு வழங்க அனுமதி கோரி அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.
இந்தநிலையில், சமயபுரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்குவதற்கான அறிவிப்பை அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இத் திட்டத்தை சிறப்பாக செயல்ப டுத்த தயாராக உள்ளோம். இத்திட் டத்தின்படி காலை 8 முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற் படுத்தப்படும் என்றார்.
இதுகுறித்து ரிஷபம் அறக் கட்டளை நிறுவனர் வி.வெ.விஸ் வேஸ்வரன் கூறியது: சமயபுரம் கோயிலுக்கு தினந்தோறும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும், கிராமப் புறங்களிலிருந்தும் வருகின்றனர். பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கோயில் சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி யானது. முடி காணிக்கை அளிப்பதற்கு கட்டணமில்லை என அறிவித்துள்ளதும் மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.