தமிழகம்

அரசு மற்றும் தனியார் நிலங்களில் ரூ.50 கோடியில் நாட்டு மரக்கன்று நடும் திட்டம்: சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி

80views

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.50 கோடி செலவில் மண் சார்ந்த நாட்டு மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில்அளித்து அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், எக்காரணம் கொண்டும்தொழிற்சாலை கழிவுநீரை கடலிலோ, ஆற்றிலோ கலக்கவிடக் கூடாது என்று ஆலை உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஈரோடு, நாமக்கல் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 10 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். பனைமரங்கள் நிலத்தடி நீரை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, அதன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படும்.

புதிய பசுமை திட்டங்களை கண்டறியவும், எளிய தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாடு காலநிலை மாற்ற அமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

சிறந்த சுற்றுச்சூழல் மிக்க, அழகிய கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழை 2 கடற்கரைகளுக்கு பெறுவதற்காக ரூ.20கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தொழிற்சாலைகளை இயக்குவதற்கான அனுமதி ஆணையை ஆண்டுதோறும் வழங்குவதற்கு பதிலாக தகுதியான தொழிற்சாலைகளுக்கு கால அளவை நீட்டித்து தொகுப்பாக வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரூ.32 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் ரூ.2 கோடி செலவில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும். சென்னை மெரினா கடற்கரை ரூ.20 கோடி செலவில் அழகுபடுத்தப்படும்.

அரசு மற்றும் தனியார் நிலங்களில் ஊரக வளர்ச்சி துறை மூலம் மண்சார்ந்த நாட்டு மரக்கன்றுகள் நடும் திட்டம் ரூ.50 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!