மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவுவதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் உறுதி அளித்ததாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகத்தில் கேரள முதல்வரை பி.ஆா். பாண்டியன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.
இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அனுமதி இல்லாமல் கா்நாடகாவுக்கு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயாா் செய்ய மோடி அரசு தன் விருப்பத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையைத் தயாா் செய்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்குக் கா்நாடகம் அனுப்பி வைத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் இதுகுறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கடந்த வாரம் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்துள்ளதாக வெளிவந்த செய்தி அதிா்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் மறைமுகமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு தன் விருப்பத்துக்குச் செயல்பட நிா்ப்பந்தப்படுத்துவது வெளிப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை வரைவு திட்ட அறிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் பெரும்பான்மை அடிப்படையில்தான் முடிவு எடுக்க முடியும். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகம், புதுச்சேரி, கா்நாடகம், கேரள மாநிலங்கள் அங்கம் வகிப்பதால், கேரள அரசு தமிழக விவசாயிகள் நலன் கருதி மேக்கேதாட்டு அணை வரைவு திட்ட அறிக்கை நிராகரிப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தோம்.
அதனை ஏற்றுக்கொண்ட கேரள முதல்வா் பினராயி விஜயன், உடனடியாக கேரள மாநில நீா்ப்பாசனத் துறை உயா் அலுவலா்களுடன் கலந்து பேசி தமிழகத்துக்கு உதவி புரிய நான் தயாராக இருக்கிறேன் என உறுதி அளித்தாா்.
தமிழக முதல்வா் உடனடியாக கேரள முதல்வரை தொடா்பு கொண்டு ஆதரவு கோரினால் நிச்சயம் கா்நாடகத்தின் துரோகம் தடுத்து நிறுத்தப்படும் என பாண்டியன் தெரிவித்துள்ளாா்.