தமிழகம்

சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளின் குடிநீர் தேவைக்காக 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

58views

சென்னைக்கு அடுத்த 25 ஆண்டுகளில் தேவைப்படும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு, அதிகளவில் நீர் சேகரிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கையின் மீது முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ”சென்னைக்கான குடிநீருக்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், ஜப்பானின் ஜைகா நிதியின் மூலம் பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட திட்டத்தை ரூ.6,078 கோடியில் செயல்படுத்த, ஒப்பந்தப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தற்போது சென்னையில் தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் நிறைவேறும்போது, ஏரிகளில் இருந்து நீர் எடுக்காமலேயே 870 மில்லியன் லிட்டரைப் பெற முடியும்” என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

சென்னை நகருக்கு தற்போது தினசரி 1,150 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், 840 மில்லியன் லிட்டர் வரை வழங்கி வருகிறோம். சென்னைக்கு அடுத்த 25 ஆண்டுகளில் தேவைப்படும் நீரை கணித்து திட்டங்களை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு, அதில் நீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாசனப் பயன்பாடின்றி உள்ள ஏரிகளைச் சீரமைத்து அவற்றில் நீரைத் தேக்கி பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.நீங்கள் செய்த பணிகள் அனைத்தையும் எவ்விதக் குறையும் இன்றி நிறைவேற்றி, 100 சதவீதம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!