தமிழகம்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: மத்திய அரசின் முடிவுக்கு கி.வீரமணி வரவேற்பு

76views

‘கரோனாவின் பாய்ச்சல் அதிகமான நிலையில், மருத்துவர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வகையில், மருத்துவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டினைச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். வாய்ப்பு வசதியுள்ளவர்களும் அமைப்புகளும், அறக்கட்டளைகளும் உதவிக் கரம் நீட்ட வேண்டும்’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

‘கரோனா தொற்றின் கொடுவேகம் மிகப்பெரிய அலையாக இரண்டாம் முறை நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனைக்கும், துன்பத்திற்கும் உரியதாகும். பொருளாதார வீழ்ச்சி, தேக்கம் இதன்மூலம் தவிர்க்க முடியாத முக்கிய விளைவு என்றாலும், உயிர் காப்புக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும் முன்னுரிமை தருதல் வேண்டும். இத்தொற்றை அறவே நீக்கி பழையபடி ஒரு இயல்பு நிலையைக் கொண்டு வருவது அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை.

 

மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும்

எனவே, மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டிய இக்கட்டான தருணம் இது. அரசியல் பார்வை, கட்சிக் கண்ணோட்டக் குற்றச்சாட்டுகள், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அரசியல் வியூகங்களை அறவே தவிர்த்து, மக்கள் பாதுகாப்பு, சமூக நலம் என்ற கண்ணோட்டம் மட்டுமே மேலோங்கி நிற்க வேண்டும்.

அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பும், உடல்நலம் பேணுதலும் இக்காலகட்டத்தில் மிகவும் முக்கிய மானவை. மத்திய அரசு தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு இல்லாது உற்பத்தியைப் பெருக்க நன்கு திட்டமிடல் வேண்டும். நம் நாட்டு பொதுத் துறை நிறுவனங்கள் உதவிகளை நல்ல முறையில் நாடி, தேவையான மருந்துகள் உற்பத்தி, விநியோகம் இவற்றைத் தாராளமாக்கவேண்டும்.

 

அவசரம், அவசரம் – அவசியம்

மாநிலங்கள் பொறுப்பு என்று, நிலைமை கட்டு மீறிய பின், மத்திய அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மக்களுடன் நேரடித் தொடர்புள்ள அரசுகள் மாநில அரசுகள்தான் – மத்திய அரசு அல்ல. எனவே, மாநில அரசுகளுக்குப் பொறுப்புகளைத் தந்து மத்திய அரசு ஒருங்கிணைத்தால் நிறைந்த பலன் ஏற்படும்.

கரோனா தொற்றைப் போக்க நீண்ட கால தடுப்புத் திட்டமும், நிகழ்கால நடவடிக்கைகளும் இணைந்த செயலாக்கம் உருவாக்கப்படல் அவசரம், அவசரம் – அவசியம். நாட்டில் மத்திய பட்ஜெட்டில் வெறும் 3 சதவிகிதம்தான் சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைக் கூடுதலாக்கி – இரட்டிப்பாக்கி குறைந்தது 6 விழுக்காடாக்கி, அடிப்படைக் கட்டுமானங்களை விரிவுபடுத்த வேண்டும்.

 

130 கோடி மக்களுக்கு நல்வாழ்வுப் பாதுகாப்பை உறுதி செய்க

நீட் தேர்வு போன்ற ஊழல் ஊற்றுத் தடுப்புச் சுவர்களை இடித்துத் தள்ளி, அந்தந்த மாநிலங்களே தரமான மருத்துவப் படிப்பைத் தர மருத்துவ அறிஞர்களின் அறிவுரைக் குழுவை அமைத்து, ஓய்வு பெற்ற அனுபவம் மிக்க அறிஞர்களின் செம்மாந்த அறிவைப் பயன்படுத்தி, நாட்டில் சுகாதாரப் பணி யாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு பெருக்கிட வேண்டும்.

மருந்தியல் கல்லூரிகளில் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்திட, தனி சிறப்பு உதவி நிதிகள் தனியார் உள்பட பலருக்கும் அளித்து, தக்க மேற்பார்வையோடு ஆய்வுகள் நடத்தினால், 130 கோடி மக்களுக்கு நல்வாழ்வுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

வருமுன் காக்கும் வகையில், ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்தறிந்து, குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பூசி போடும் திட்டம்போல, நிரந்தரத் தொற்றுகளைத் தடுக்க ஊசி, மருந்துகள் மற்றும் பல மருத்துவ முறைகளை அடுக்கடுக்குகளாக வகுத்தால், ஏழை – எளிய, சாமானியர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடும்.

 

காலந்தாழ்ந்த முடிவுதான் என்றாலும், வரவேற்கத்தக்கது

மே மாதம் ஒன்றாம் தேதிமுதல் 18 வயது வந்தவர்களுக்கும் தடுப்பூசி என்பதை நேற்று (19.4.2021)தான் பிரதமர் அறிவித்துள்ளார். காலந்தாழ்ந்த முடிவுதான் என்றாலும், வரவேற்கத்தக்கது. தடுப்பூசி கையிருப்பு மிக முக்கியம். இப்போதே இரண்டாம் முறை போட்டுக் கொள்ளும் தடுப்பூசிக்கு பல ஊர்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சிக்குரியது!

மருத்துவ அறிவியலை மட்டும் நம்ப வேண்டும்; கைதட்டுவது, விளக்கேற்றுவது, ஓசை எழுப்புவது போன்ற செயல்களைச் செய்வதினால் கரோனா தொற்றுப் போய்விடாது என்பது நன்கு புரிந்துவிட்டது இப்போது.

 

மக்களின் ஒத்துழைப்புதான் பிரதானமானது

இனியாவது அறிவியல் மனப்பான்மை ஆட்சி பீடமேறட்டும்; அனைத்து மக்களின் ஒத்துழைப்பும் மத்திய – மாநில அரசுகளுக்கு இப்பிரச்சினையில் இன்றியமையாததாகும். எவ்வளவுதான் அரசுகள் கட்டுப்பாடு விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்புதான் பிரதானமானது.

நமக்காகத்தான் கட்டுப்பாடு; நம் உயிரைக் காக்கவும், மற்ற உயிர்களைக் காப்பாற்றவும்தான் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் என்ற உணர்வு பரவலாக நம் மக்களிடையே ஏற்படவே இல்லை என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.

பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு எல்லா அரசியல் கட்சிகள், அமைப்புகள், அறக்கட்டளைகள் உதவிகளை ஆங்காங்கு தேவைப்படும் கள நிலவரங்களுக்கேற்ப செய்ய உடனே முன்வருவதும் இப்போதைய முக்கியத் தேவை’.

 

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!