ஹரியாணாவில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீஸார் நடவடிக்கை; எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது: மேலும் ஒரு நபரை 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வழக்கில் கும்பல்தலைவனை போலீஸார் கைது செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க 3-வதாக கைது செய்யப்பட்ட நபரை போலீஸ் காவலில் விசாரிக்க 4 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் பணம்செலுத்தும் ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் சுமார் ரூ.1கோடி வரை பணம் கொள்ளைஅடிக்கப்பட்டது. சென்னையில் 15இடம் உட்பட தமிழகம் முழுவதும்21 இடங்களில் கைவரிசை காட்டிவிட்டு, தப்பிய ஹரியாணா கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களை சென்னை தனிப்படை போலீஸார் ஒன்றன்பின் ஒன்றாக கைது செய்து வருகின்றனர்.
இதுவரை ஹரியாணாவை சேர்ந்த அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத், நஜீம் உசேன் ஆகிய 3 பேரை கைது செய்து சென்னைஅழைத்து வந்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் பல குழுக்களாக பிரிந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது போலீஸாரின் புலன்விசாரணையில் தெரியவந்தது.
அதில் ஒரு கும்பலின் தலைவனான சவுகத் அலி என்பவரை ஹரியாணாவில் சென்னை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்துவிசாரணை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே பீர்க்கன்கரணை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நஜிம் உசேனின் தலைவனாக சவுகத்அலி இருந்தது போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், 3-வதாக கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் உள்ள நஜிம் உசேனை காவலில் எடுத்து விசாரிக்க பீர்க்கன்கரணை போலீஸார் முடிவு செய்தனர். முடிச்சூர் பகுதியில் உள்ள பணம் செலுத்தும் வசதி கொண்ட ஏடிஎம்மில் கொள்ளை அடித்ததில் இவருக்கு தொடர்பு உள்ளது.
இதுதொடர்பான மேலும் பல தகவல்களை சேகரிப்பதற்காக நஜிம் உசேனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பீர்க்கன்கரணை போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நஜிம்உசேன் நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தாம்பரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து அவர் பீர்க்கன்கரணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.