முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸூக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித் துறை சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கடந்த 2015-16 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.20லட்சமும், 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.82.12 கோடியும் வரியாகசெலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
வருமான வரித் துறையின் இந்த நோட்டீஸை ரத்து செய்யவும்,மேல் நடவடிக்கைக்கு தடைவிதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதிபி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறையின் நோட்டீஸூக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அத்துடன் வருமான வரித் துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதிதீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும்உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக வருமான வரித் துறை பதில்தர உத்தரவிட்டு விசாரணையை டிச.8-க்கு தள்ளிவைத்தனர்.