ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மேசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள், பயணம் செய்ய முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்து வருகின்றனர் என்ற செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பயணிகளின் குறைகளைப்போக்க நில நிர்வாகக்கூடுதல் ஆணையர் மரியம் பல்லவி பல்தேவ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத ரெட்டிஆகியஅரசு உயர் அலுவலர்களை நேரடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைத்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கண்ணப்பர் திடல் சமூக நலக்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், அப்பயணிகள் பயணம் செய்வதற்கு ஏதுவாக ரயில் வசதியை ஏற்படுத்தித்தருவதற்கு ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசால் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பயணியர்களின் வசதிக்காக உதவி மேசை (Help Desk) வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து, தாங்கள் பயணம் செய்வதற்கு உரிய ஏற்பாடு செய்து வரும் தமிழக முதல் வருக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.