மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மலை ரயில் நீராவி இன்ஜினை டீசலில் இயக்கும் வகையில், 4 பெட்டிகளுடன் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “நீலகிரி மலை ரயில் நீராவி இன்ஜின்,நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயில்மூலமாக இயக்கப்பட்டு வந்தது.இதனால், அதிக புகை வெளியேறி சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்பட்டு வந்ததுடன், ரயிலின் இழுவை திறனும் குறைந்தது. மேலும், பராமரிப்பு செலவும் அதிகமாகி வருவதால், டீசலில் இயங்கும் வகையில் நீராவி இன்ஜின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், மாசு மற்றும் செலவு குறையும்.
இந்த இன்ஜினின் சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருந்தது. மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு 4 பெட்டிகளுடன் மட்டுமே மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. டீசல் பயன்படுத்துவதன் மூலமாக, 5 பெட்டிகளுடன் மலை ரயிலை இயக்கலாம். இதனால், கூடுதல் பயணிகள்ரயிலில் பயணிக்க முடியும். பராமரிப்பு செலவும் குறையும். வரும் ஏப்ரல், மே மாதங்களில் டீசலில் இயங்கும் வகையில் மலை ரயில் இயக்கப்படும்” என்றனர்.