மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மாதவரம் – சிறுசேரி தடத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் – சிறுசேரி, மாதவரம் – சோழிங்கநல்லூர், பூந்தமல்லி – விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
மற்ற தடங்களைக் காட்டிலும் மாதவரம் – சிறுசேரி தடத்தில்தான் மொத்தமுள்ள 45 கி.மீ தூரத்தில் அதிகபட்சமாக 26 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைகிறது. இப்பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மாதவரம் – சிறுசேரி இடையே புரசைவாக்கம், அயனாவரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக இந்த தடம் அமைக்கிறது. மற்ற தடங்களைக் காட்டிலும் இந்த தடத்தில் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே, சுமார் 26 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் இயக்கப்படும். 30 மெட்ரோ ரயில் நிலையங்களும் சுரங்கப்பாதையில் அமைகிறது. உயர்மட்ட பாதையை விட, சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும்போது பணிகள் அதிகமாக இருக்கும்.
இந்தத் தடத்தில் பணிகளை மேற்கொள்ள நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்பகட்ட பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.