மருத்துவமனையிலிருந்து சிவசங்கர் பாபா தப்பியோட்டம் ! எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மூன்று தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இந்த நிலையில் சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை வேறொரு மாநிலத்திற்குச் சென்று நடத்துவதற்கு ஏதுவாக சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் சென்று அவரிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதனையடுத்து விசாரணைக்காக டேராடூன் சென்றபோது தனியார் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பிச் சென்றது தெரியவந்தது. தப்பியோடிய சிவசங்கர் பாபா, உத்ரகாண்டில் தனக்கு சொந்தமான ஆசிரமங்களில் பதுங்கி உள்ளரா என போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் சிவசங்கர் பாபா நேபாளத்திற்கு தப்பிச்செல்லாமல் தடுக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து எல்லைகளில் ஊஷார் படுத்தியுள்ளனர். அதன்படி உத்தரகாண்ட், டெல்லியில் அம்மாநில போலீசாருடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.