சினிமா

பீஃப் அரசியலால் ஓரங்கட்டப்பட்ட 400 கோடி ரூபாய் படம்

77views
இந்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூரின் பிரமாஸ்திரா திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்து புராண இதிகாச அடிப்படையில் எடுக்கப்பட்ட மாடர்ன் திரைப்படம் இது. படத்தின் முழுப்பெயர் பிரமாஸ்மிரா பார்ட் ஒன் – சிவா. சிவா என்பது சாட்சாத் சிவனேதான்.
ரன்பீர் கபூர் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் மகன். மேரா நாம் ஜோக்கர் போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்து இந்தித் திரையுலகில் நீங்கா இடம் பிடித்தவர். ரன்பீரின் அம்மா நீத்து சிங். அறுபதுகளின் இறுதியில் இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், எழுபதுகளில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கினார். 1974 இல் ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரனை இந்தியில் ரீமேக் செய்த போது நீத்து சிங்கை அதில் நாயகியாக நடிக்க வைத்தார். ரன்பீர் திருமணம் செய்திருக்கும் அலியா பட்டின் தந்தை இயக்குனரும், தயாரிப்பாளருமான மகேஷ் பட். மகேஷ் பட்டின் தந்தை நானாபாய் பட் இந்தி, பஞ்சாபி மொழிகளில் படங்களை தயாரித்து இயக்கியவர்.
பிரமாஸ்திரா படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இவர் இந்தி நடிகர் டெப் முகர்ஷியின் மகன். இவரது சகோதரி திருமணம் செய்திருப்பது, இந்தியின் பிரபல இயக்குனர் அஷுவதோஷ் கவாரிகர். நடிகை கஜோல், ராணி முகர்ஜி, தனிஷா முகர்ஜி ஆகியோர் இவரது ஒன்றுவிட்ட சகோதரிகள்.
பிரமாஸ்திராவை தயாரித்திருக்கும், தர்மா புரொடக்ஷன்ஸை உருவாக்கியவர், இந்தியின் பிரபல தயாரிப்பாளர் யாஷ் ஜோஹர். அவரது மகன் கரண் ஜோஹர் தற்போது தர்மா புரொடக்ஷன்ஸை நிர்வகித்து வருகிறார். இயக்கம், தயாரிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என கரண் ஜோஹர் இந்தியா முழுக்க பிரபலம்.
மேலே பார்த்த அனைவரது குடும்பமும் இந்தித் திரையுலகுடன் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் தொடர்பில் இருப்பவை. அனைவருமே பிறப்பால் இந்துக்கள். நியாயமாக பிரமாஸ்திரா படத்தை இந்துத்துவா ஆள்கள் கொண்டாடியிருக்க வேண்டும். ரன்பீர் கபூர் ஒன்பது வருடங்களுக்கு முன் கலந்து கொண்ட நிகழ்ச்சியால், பாய்காட் பிரமாஸ்திரா என்று அவருக்கு எதிராக பெரிய கலகத்தை உருவாக்கினர்.
ஏ ராக்கிங் லஞ்ச் வித் தி ராக் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பி வருகிறது. பிரபல நட்சத்திரம் ஒருவர் லஞ்ச் சாப்பிடுவார். கூடவே என்னென்ன தனக்குப் பிடிக்கும் என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளருடன் பேசுவார். ஒன்பது வருடங்களுக்கு முன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்பீர் கபூர், ஐ யாம் ஏ பிக் பீஃப் கைய் என்று கூறினார். அதாவது, பீஃப் விரும்பிச் சாப்பிடுவேன் என்றார்.
பிரமாஸ்திரா வெளியாகும் போது இந்த ஒருவரி கமெண்டை எடுத்துப் போட்டு, இந்துக்களின் சென்டிமெண்டை ரன்பீர் சிதைத்துவிட்டார் என பாய்காட் பிரமாஸ்திரா மூவ்மெண்டை சிலர் தொடங்கினர். அது பெரும் இயக்கமானது. பிரமாஸ்திரா குறித்த தகவல்கள் அதிகம் வெளியாகாமல் மீடியாக்கள் பார்த்துக் கொண்டன. இந்தியின் பிரபல விமர்சகரும், ட்ரேட் அனலிஸ்டுமான தரண் ஆதர்ஷ் ஒவ்வொரு படத்தின் வசூலையும் தினசரி அறிவிப்பார். அவரும்கூட, பிரமாஸ்திரா வெளியான முதல்நாள், இரண்டு ஸ்டார் கொடுத்து டிஸ்அப்பாயின்மெண்ட் என ஒருவரி விமர்சனம் எழுதியதோடு போனவர்தான், இப்போதுவரை பிரமாஸ்திரா எவ்வளவு வசூலித்தது என்பது உள்பட, அப்படம் குறித்த எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
இந்தப் புறக்கணிப்புக்குப் பிறகும் நல்ல ஓபனிங்கை படம் பெற்றது. கதை, திரைக்கதை சுவாரஸியமில்லாததால் அடுத்தடுத்த நாள்களில் வசூல் குறைந்தது. நேற்றுவரை படம் இந்தியாவில் 243 கோடிகளை வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. நஷ்டம் ஏற்படும். பாய்காட் பிரமாஸ்திரா மூவ்மெண்ட் இல்லாமலிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் அதிகம் வசூலித்திருக்கும்.
ரன்பீர் கபூர் மட்டுமில்லை, அவரது மனைவி அலியா பட், இயக்குனர் அயன் முகர்ஜி, தயாரிப்பாளர் கரண் ஜோஹர் இவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் என யாருடைய படங்களையும் பார்க்கக் கூடாது, ஆதரிக்கக் கூடாது என ஒரு கோஷ்டி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!