திருக்கோவில்களில் பிரசாதங்களை தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் ஜெ.குமரகுருபன் பிறப்பித்துள்ள உத்தரவில்,
“தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் ஆவின் நிறுவனத்தின் வெண்ணை மற்றும் நெய் பொருட்களை கொண்டு மட்டுமே தயாரிக்க வேண்டும்.
பிரசாதங்களின் தரத்தினை மேம்படுத்தவும், பிரகாரங்களில் தரமற்ற நெய்யை பயன்படுத்தி விளக்கு/தீபம் ஏற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருக்கோவில்களில் விளக்கேற்றவும், நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்யவும் பயன்படுத்தப்படும் வெண்ணை, நெய் போன்ற பொருட்களை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும். இதற்காக ஆவின் நிறுவனத்தில் 15 மி.லி பேக்கிலிருந்து 20கி.கி வரையிலான பேக்குகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.