125
கல்வியானது ஒவ்வொரு தனி மனிதனையும் சென்று சேர வேண்டும். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் சில ஏற்றத் தாழ்வுகள் இருந்து கொண்டே தான் வருகின்றன. அதையெல்லாம் தாண்டி ஒருவன் கல்வி வாசலை மிதிப்பதே சவாலானது. அவ்வாறு மிதிக்கும் போது கல்வி பயில பணமில்லாமலோ அல்லது எழுதுபொருள் இல்லாமலோ போவது இந்த உலகின் பிழை. அந்த பிழையை சரி செய்ய வந்தராகவே பார்க்கப்படுகிறார், பென்சில் மேன் என்றழைக்கப்படும் திரு.கே. வெங்கட்ராமன்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பென்சில் மேன் என அறியப்படும் இவர், அடிப்படையில் ஒரு கணக்காளர். மூன்று தலைமுறைகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வருபவர். தான் இச்சமூகத்திலிருந்து பெற்றதை எல்லாம் மீண்டும் அச்சமூகத்திற்கு வழங்குவதே மகிழ்ச்சி என்ற நோக்கம் கொண்டிருக்கும் இவர், உலகின் எந்த ஒரு பகுதியிலிருக்கும் ஒரு சமூகத்திற்கு உதவி என்றாலும் அறுபத்து இரண்டு வயது இளைஞராய் தன்னால் முடிந்த உதவிகளையும், முழு உதவிகளையும் முதல் ஆளாக முன்னின்று வழங்குபவர்.
கல்வி, கிடைக்கும் தொலைவில் இருந்தும், எழுதுபொருள் இல்லாததால் எட்ட நின்று பார்க்கும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் கொடுத்து கல்வியை கிட்ட சென்று சேர்ப்பவர் தான் இந்த பென்சில் மேன்.
2016 ஆம் ஆண்டில், 400 தன்னார்வலர்களுடன் மிகப்பெரிய அளவில் எழுதுபொருட்களை சேகரித்து, கிட்டதட்ட 300 அட்டைப்பெட்டிகளை அமீரக செம்பிறைக்கு வழங்கினார். 2017 ஆம் ஆண்டில், இதே பென்சில் மேன் வறுமையின் இடமாக அறியப்படும் சோமாலியாவுக்காக பருப்பு சேகரிக்க முன்வந்தார். தன்னுடைய ஆற்றாலும், சேவை குணத்தாலும் ஒரே நாளில் 25 டன் பருப்பை சேகரித்து அளித்தார். தேவை இருக்கும் மக்களின் மீது தீராக் காதலால் கொண்ட இவர், தன்னுடைய 62 வயதிலும் சேவை செய்வதில் இளைஞராகவே வலம் வருகிறார்.
தன் சேவை குணத்துக்கு ஆதாரப் புள்ளியாக அவர் தெரிவிப்பது, “நான் துபாயில் இருப்பதால் மட்டுமே இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளில் உள்ள 1,00,000 குழந்தைகளை என்னால் ஆதரிக்க முடிகிறது. நான் என் வாழ்நாள் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்தேன், என் இரண்டு குழந்தைகளும் இங்கு தான் பிறந்தார்கள், இப்போது அவர்கள் அமெரிக்காவில் குடியேறி தங்கள் வேலைகளில் வசதியாக உள்ளனர். துபாய் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. இது என்னுடைய நேரம், நான் பெற்றதை எல்லாம் திருப்பித் தர வேண்டிய நேரம். முதல் இருபது ஆண்டுகள் கற்றல் மற்றும் கல்விக்காகவும், அடுத்த முப்பது ஆண்டுகள் நன்றாக சம்பாதிக்கவும், அதன் பின் மீதமுள்ள ஒருவரின் வாழ்க்கையானது நாம் கொண்ட அறிவு மற்றும் ஞானத்தின் அடிப்படையில் சமுதாயத்திற்கு திருப்பித் தர அர்ப்பணிக்கப்பட வேண்டும்” என்று தன்னுடைய மிகப்பெரிய மனதை சிறு வாக்கியங்களுக்குள் அடக்கிக் கொள்பவர்.
தொண்டு பள்ளிகள் நடத்துவதிலிருந்து உதவி தேவைப்படும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் மற்றும் சீருடைகள் வழங்குவது வரை, தேவை இருக்கும் மக்களுக்கு உதவிப் புள்ளியாக திரு.கே.வெங்கட்ராமன் இருக்கிறார். இவர் அமீரக செம்பிறை மற்றும் பிற மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கான தொண்டு இயக்கங்களை ஒழுங்கமைத்தும், உதவியும் வருகிறார். இந்திய வணிகம் மற்றும் தொழில்முறை கவுன்சிலின் (IBPC) உறுப்பினரான இவர், இளம் உறுப்பினர்களை தன்னார்வ கற்பித்தல் சேவைகளை வழங்க ஊக்குவித்து வருகிறார்.இது மட்டுமல்லாமல் இந்திய கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆங்கில பாடங்களை கொண்டு சேர்க்க ஆங்கிலத்தில் அழைப்பு என்ற திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
உதவும் மனம் ஒருபோதும் உறங்காது என்பதை போல, இந்த சமூகம் தனக்கு கொடுத்த அனைத்தையும் திரும்பி கொடுத்து, தன் சேவை குணத்தால் உலகை சுருக்கி கொண்டு வரும் இந்த பென்சில் மனிதரின் சேவைத் தொடர நான் மீடியா மனதார, மகிழ்வுடன் வாழ்த்துகிறது.
-
ந.செல்வ முருகன்
add a comment