தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில், 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் சேலம் மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மத்திய வங்கக்கடல், தெற்கு அந்தமான் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.