செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் செப்.15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு

53views

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் செப்.15-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக தரப்பிலும், வேறு சிலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டு இருந்தது. அதன்படி பிற மாவட்டங்களில் கடந்த 2019-ம்ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த புதிய மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்து 2020 டிச.11-ம் தேதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பணிகளை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்றுதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா தனது வாதத்தில், ”இந்தியாவிலேயே கரோனா பரவல் தமிழகத்தில்தான் அதிகமாக இருந்தது. இதனால் இந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் செய்ய முடியவில்லை.

இதுவரை தமிழகத்தில் 24.29 லட்சம் பேருக்கு கரோனா தொற்றுபாதிப்பு ஏற்பட்டு, அதில் 31 ஆயிரத்து 386 பேர் இறந்துள்ளனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே மீண்டும் அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.

அதையேற்க மறுத்த நீதிபதிகள், ”எதற்கெடுத்தாலும் கரோனாவைக் காரணம் காட்டி அவகாசம் கோருவது என்பது அனைத்து வழக்குகளிலும் தற்போது சகஜமாகி விட்டது. இந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஏற்கெனவே போதுமான அவகாசம் வழங்கப்பட்டு விட்டது” என மாநில தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினர்.

தொடர்ந்து, ”உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்து வரும் செப்.15-ம் தேதிக்குள்அந்த மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, விடுபட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுகுறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறைஅமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!