இரண்டு வாரங்களுக்கு முன்பே பருவமழை துவங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் உதகை மற்றும் நீலகிரியின் மற்ற பகுதிகளில் நேற்று தென்மேற்கு பருவமழை துவங்கியது. மே மாத மத்திய பகுதியில் நல்ல மழைப்பொழிவு விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்தது. நேற்று உதகையில் 3.6 மி.மீ மழை பதிவானது.
நடுவட்டம் பகுதியில் 10 மி.மீ மழையும், அப்பர் பவானியில் 42 மி.மீ மழையும், அவலாஞ்சியில் 35 மி.மீ மழையும், பந்தலூர் பகுதியில் 25 மி.மீ மழையும் பெய்தது. அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதிகளிலும் கனமழை காரணமாக விளைநிலங்கள் பாதித்துள்ளது. அதே போன்று தமிழகத்தில் அதிக மழைப் பொழிவை பெறும் பகுதியான கோவை மாவட்டம், வால்பாறையின் சின்னக்கல்லார் பகுதியில் நேற்று 50 மி.மீ மழைபொழிவு பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று மற்றும் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல், மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும். 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அதே போன்று அரபிக் கடலில் கேரளா, கர்நாடகா, கோவா கடலோரப் பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.