தமிழகம்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யும்: வானிலை மையம்

52views

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் கூறியதாவது: தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரும்.

இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கன, மிக கன மழை பெய்யும். புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.

மற்ற மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம். நாளை தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல், மிக கன மழை பெய்யும். வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யலாம்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் 18 செ.மீ., மழை பெய்து உள்ளது. கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை மற்றும் துாத்துக்குடியில் தலா 17; புதுச்சேரியில் 14; துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தலா 13 செ.மீ., மழை பதிவானது.

இன்றும், நாளையும், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று, 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இன்று முதல் 3ம் தேதி வரை, தென் கிழக்கு அரபிக் கடலை ஒட்டிய தெற்கு கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில், சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசலாம் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு புவியரசன் கூறியுள்ளார்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!