ஜவ்வாதுமலை அருகே உள்ள சாளுர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குத்துக் கல் உள்ளதாக செங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ‘தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் அடுத்த சாளுர் கிராமம் மாரியம்மன் கோயில் எதிரே குத்துக் கல் உள்ளது. இது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். 10 அடி உயரமும், 5 அடி அகலம் கொண்டது.
முற்காலத்தில் உயிரிழந்தவர் களை புதைக்க, பல வடிவ கற்களை அடுக்கி கல்லறை அமைத்தனர். மேலும், குழுத் தலைவர் அல்லது சிற்றரசன் உயிரிழந்தால், அவர்களை புதைத்த குழியின் மீது குத்துக்கல் நடும் வழக்கம் இருந்துள்ளது. இந்த குத்துக்கல்லை யானைக் கட்டி கல் என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில் சிற்றரசன் இருந்ததாகவும், குத்துக்கல்லில் யானை கட்டி வைத்திருந்ததாகவும் கூறுகின்றனர்.
இதேபோல், அத்திப்பட்டு எனும் கிராமத்தில் 3 குத்துக்கல் அருகருகே உள்ளன. ஜவ்வாது மலையில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் காணப்படும் நிலையில், குத்துக்கல்லும் அதிகளவில் காணப்படுவது ஜவ்வாதுமலையின் தொன்மைக்கு வலு சேர்க்கிறது.
இந்த மலையில் கல்திட்டைகள், கற்கோடாரிகள், தொழில் கூடங்கள் என வரலாற்று தடயங்கள் உள்ளன. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வரலாற்று சிறப்புகளை வெளிக்கொண்டு வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.