செய்திகள்தமிழகம்

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கால்வாய் பாசனத்துக்காக 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்

41views

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சதாசிவம், துணைஆட்சியர் வீர் பிரதாப் சிங், நீர்வளஆதாரத் துறை சிறப்பு தலைமைப் பொறியாளர் (மேல் காவிரி வடிநில வட்டம், சேலம்) ஜெயகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கால்வாய் பாசனத்துக்கான தண்ணீரை சேலம் ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 230 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகள் பாசன நீரை முழு அளவு பயன்படுத்தி, கூடுதல் விளைச்சல் பெற வேளாண்மைத் துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

விதை நாற்றுகள், உரம், இடுபொருட்கள் அனைத்தும் இருப்புவைக்கப்பட்டு போதிய முன் நடவடிக்கை மூலம் விவசாயப் பணிகள்மிகத் துரிதமாக தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேட்டூர் அணையில் இருந்து முதல்கட்டமாக விநாடிக்கு 300 கனஅடி என்ற அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், அணை செயற்பொறியாளர் தேவராஜ், உதவிசெயற்பொறியாளர் சுப்பிரமணியம், வட்டாட்சியர் சுமதி மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே மேட்டூர் அணைக்கு 2 நாட்களுக்கு முன்புவிநாடிக்கு 22 ஆயிரத்து 942 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 21 ஆயிரத்து 692 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவையை பொறுத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், ஜூலை 31-ம் தேதி முதல் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 81.97 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்றுமுன்தினம் காலை 82.65 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 44.64 டிஎம்சி-யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!