செய்திகள்தமிழகம்

சேலம் செவ்வாய்பேட்டையில் நேரக் கட்டுப்பாட்டுடன் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் திறப்பு

80views

சேலம் செவ்வாய்பேட்டையில் நேரக் கட்டுப்பாட்டுடன் நேற்று மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் திறக்கப்பட்டது. இதனால், வழக்கமான நாட்களைபோல அங்கு பரபரப்பு நிலவியது.

தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வாகனங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சிறு வியாபாரிகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று சிறு வாகனங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறு வியாபாரிகள் பொருட்களை கொள்முதல் செய்ய வசதியாக சேலம் மாவட்டத்தில் உள்ள மளிகை பொருட்கள் மொத்த விற்பனைக் கடைகள் நேற்று முதல் காலை 6 மணி முதல் காலை 10 மணி திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மளிகை பொருட்கள் மொத்த விற்பனைக் கடைகள் அதிகம் உள்ள சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்கெட் பகுதியில் நேற்று காலை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த சிறு வியாபாரிகள் மளிகை பொருட்களை கொள்முதல் செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

இதனால், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் வழக்கமான நாட்களைபோல காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை பரபரப்பாக இருந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!