சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும் என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் சென்னை, மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுகிறது. இதற்கான மருத்துவமனை வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக தொடங்கப்படவுள்ள சிகிச்சைப் பிரிவு வாரத்தில் ஒருநாள் மட்டும் செயல்படும். இப்பிரிவில் பொது மருத்துவர், சிறுநீரகவியல் துறை மருத்துவர், பிளாஸ்டிக் சர்ஜன், என்டோகிரைனாலாஜிஸ்ட் என சிகிச்சையின் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
வருங்காலத்தில், மூன்றாம் பாலினத்தவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. இச்சிகிச்சைப் பிரிவு தொடங்குதல் மற்றும் செயல்படுத்தலுக்கு குழு அமைக்கப்படவுள்ளது. இக்குழு மூலம் சிகிச்சைப் பிரிவு தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.