தமிழகம்

சென்னையில் 11 சுரங்கப் பாதைகளை மூடியதால் நூற்றுக்கணக்கான பேருந்து சேவை பாதிப்பு

74views

கனமழையால் சென்னையில் நேற்று 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான மாநகரப் பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், சென்னையில் பெரும்பாலான வழித்தடங்களில் நேற்று காலை முதல் குறைந்த அளவிலேயே மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சில வழித்தடங்களில் பேருந்துகள் காலியாகவே சென்றன. மதியத்துக்குப் பிறகு பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தேவைக்கு ஏற்றாற்போல பேருந்துகள் இயக்கப்பட்டன.

கனமழை காரணமாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதேபோல், மழைநீரால் சென்னையில் சுரங்கப் பாதைகள் நிரம்பின. எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு வியாசர்பாடி, கணேசபுரம், அஜாக்ஸ், கெங்குரெட்டி, மேட்லி, துரைசாமி பகுதிகளில் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. மேலும், பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கன் சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டன.

இதனால் சுரங்கப் பாதைகளின் வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த வழியாகச் செல்ல வேண்டிய நூற்றுக்கணக்கான மாநகரப் பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘கனமழையால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்தனர். முக்கிய சாலைகளில் மட்டுமே கணிசமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 60 சதவீத பேருந்துகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன’ என்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!