செய்திகள்தமிழகம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கருவிகள் கையாள்வதில் முறைகேடு?- நடவடிக்கை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு

41views

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கருவிகள் கையாளப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.முத்துக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டிபிசிஆர் கருவிகள் வழங்கப்பட்டன.

இவற்றின் மூலம் தினமும் 1,500முதல் 2,000 மாதிரிகள் எடுக்கப்பட்டு,பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சுமார்மூன்றரை லட்சம் மதிப்பிலான ஒரு கருவியில் 4 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு கருவி மூலமாக ஒரு மாதிரி மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூ.5 கோடி மதிப்பிலான ஆர்டிபிசிஆர் கருவிகள் காலாவதியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கரோனா பரிசோதனைதொடர்பான கருவிகளில் முறைகேடு என்றால், அது பேராபத்து என்று கருத்துதெரிவித்த நீதிபதிகள், செங்கை மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கருவிகள் கையாளப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்யுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!