தமிழகம்

சிறப்பு வழிகாட்டி குழு… கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

42views

தமிழக சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான கொள்கை விளக்க குறிப்பை அந்த துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான கொள்கை விளக்க குறிபில், மத்திய அரசின் ஆதரவோடு, துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை “அனைவருக்கும் நல்வாழ்வு மையங்கள்” ஆக மாற்றி கூடுதல் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2020-21ஆம் ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 622 தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 4 லட்சம் தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் நவீன கர்ப்பத்தடை தடுப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு நடமாடும் குடும்ப நல விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள பல திறமையான மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய சிறப்பு பொது சுகாதார வல்லுனர்களை கொண்ட ஒரு சிறப்பு வழிகாட்டி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொரு வாரமும் கூடி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தற்போதுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

மாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஒரு சிறப்பு உயர்மட்டக்குழு, 3ஆவது அலையில் தொற்று ஏற்படும் குழந்தைகளின் சிகிச்சைக்காக ஒரு செயல் திட்டத்தை தயாரித்துள்ளது. மாநில கொரோனா கட்டளை மையம் பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள 3ஆவது அலையின் தாக்கம் பற்றி விரிவாக ஆராய்ந்து, தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளது.

இதன் அடிப்படையில் ஆக்சிஜன், தீவிர சிகிச்சை பிரிவு, வென்டிலேட்டர்கள் மற்றும் சுவாச கருவிகள் தேவை, திரவ மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு மற்றும் சிலிண்டர் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், பணியாளர்கள் மற்றும் மருந்து தேவைகள் கணக்கிடப்பட்டு 3ஆம் அலையை எதிர்கொள்ள தயாராக வைக்கப்பட்டுள்ளன.

பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், வரிசை முறை ஆய்வு செய்தல், தீவிர கண்காணிப்பு மற்றும் விரிவான நடவடிக்கைகளை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான ஆயத்த திட்டங்களுடன் மாநில அரசு 3ஆம் அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!