திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலத் தலைவராக உள்ளார். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். இந்நிலையில் எப்போதோ நடந்த நிகழ்ச்சியில் இருந்து எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட சில மோசமான புகைப்படங்களை, மர்ம நபர் ஒருவர் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்து, மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
இது எனது நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து, அவரது பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலி யுறுத்தியுள்ளார்.
புகார் அளித்த பின்னர் நடிகை காயத்ரி ரகுராம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக எம்.பி.க்கள் கனிமொழி, செந்தில்குமார் ஆகியோர், அவர்கள் கட்சி, கொள்கை சார்ந்து ட்விட்டரில் ஏதேனும் கருத்து பதிவு செய்தால், உடனடியாக பதில் அளிப்பார்கள்.
ஆனால், அவர்களது கட்சியைச் சேர்ந்தவர் என்னை ஆபாசமாக சித்தரித்து, படம் வெளியிட்டுள்ளார். அவரைக் கண்டிக்காமல் உள்ளனர். இதுதான் திமுக ஆட்சியில் பெண்களுக்கு தரப்படும் மரியாதையா?” என்றார்.