அதுவரை அசையாதிருந்த
அந்த மரத்தில்
அணிலொன்று
வியர்வையுடன் கீழே
அமர்ந்திருந்த என்னைப் பார்த்து மேலே ஏறியபடியே
கண்களை மேலும் கீழும் அசைத்தது. அந்த அசைவில்
மரத்தை தான் அசைத்தற்கான
மமதையும் அசைந்தது காற்றோடு சேர்ந்தே .
ஒலி பெருக்கியில் மந்திர உச்சாடனங்கள் காதை பிளக்க
அதே ஒலி பெருக்கியில் இடையிடையே காவல்துறையின் பக்தகோடிகளின் கவனத்திற்கு, பெண்கள், குழந்தைகள் மற்றும் அணிந்திருக்கும் நகைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ளவும், அருகில் உள்ள வர்களை எளிதாக நம்ப வேண்டாம். தீபாரதனை காட்ட அனைவரும் ஓரு சேர கைகூப்பி வணங்க, கடவுள் கொஞ்ச தூரம் தள்ளியே இருக்கிறார்.
அந்த பெருங்குரல் எனக்கு கேட்காமலில்லை, அவரழைக்கும் பெயர்தான் பொருந்தவில்லை. பொருந்தாத பெயரில் பொருந்த முயல்வது பொருத்தமற்றது. ஆனால் அழைப்பவர் என் பொருட்டே அழைக்கிறார் சர்வ நிச்சயமாக. எனக்கும் லேசாக நினைவுச்சுழலில் அப்பெயர்
ஏற்கனவே மிக நெருக்கியதாக
மிச்சமிருக்கும் நினைவுகளில் எச்சமாயிருக்கிறது. ஆங் இதோ வந்து விட்டது, காலச் சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிப்போன எனது இன்னொரு பெயர் தான் அது. தற்போது வேறு பெயரில் இறந்து கொண்டுடிருக்கும் எனக்கு இன்னொரு பெயரும் கிடைக்கலாம். பெயர்கள் இருக்கும் வரை நான் இறந்து கொண்டே இரு(ற)க்கலாம்.
பெரு நதியின் குரலொன்று ஜீவனற்று இறுதி மூச்சியில் ஓலிப்பது நம் காதுகளை அடைய பெருந் தாகம் நம்மை அடைந்தாக வேண்டும்.
கோபத்தின் குறியீடாக நீ உதட்டை சுழித்து கடிப்பதை நான் முத்திற்கு கான அழைப்பாகவே கருதி லேசாக சிரிக்க உன் கோபத்தால் மேலும் உதட்டை இறுக்காதே, என் முத்தத்தின் ஆழம் தெரிந்துவிடும்.
- கோ.மகேசன்