இளைஞர்கள் கடினமாக உழைத்தால் கிரிக்கெட் விளையாட்டில் பிரகாசிக்கலாம்,’ என இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் அணி வேக பந்து வீரர் நடராஜன் பேசியபோது, “ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பிய போது, ஊர் மக்கள் திரண்டு அளித்த வரவேற்பை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, சிறப்பாக விளையாடி தாயகம் திரும்பிய தருணம் மிகவும் நெகழ்ச்சியானது. நாட்டுக்காகவும், நான் பிறந்த சேலம் மண்ணுக்காக பெருமை சேர்த்தமை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது கடவுள் தந்த வரமாக கருதுகிறேன். ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கு, ஐபிஎல் போட்டிகளில் நான்கு ஆண்டு விளையாடியதில் கிடைத்த அனுபவமே காரணம். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள அனைவரின் கூட்டு முயற்சியே ஆஸ்திரேலியவை வெற்றி கொள்ள காரணம்.
சக கிரிக்கெட் வீரர்கள் அன்புடனும், தோழமை உணர்வுடன் என்னோடு பழகி, ஆலோசனை வழங்கி வழிநடத்தினர். இந்தியா டி 20 போட்டியில் வெற்றியடைந்த நிலையில், கேப்டன் வீராட்கோலி கோப்பையை என் கைகளில் கொடுத்த போது, மனம் நெகிழ்ந்து, மகிழ்ச்சி பெருகியது. சன் ரைஸ் கேப்டனான ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் வார்னர் ஏற்கனவே என்னை வாழ்த்தினார். மகள் பிறந்த நேரம் ஜொலிக்கபோகிறாய் என்றும் டுவிட் செய்திருந்தார். அவரின் வாழ்த்துகள் என்னை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சாலையில் டென்னீஸ் பந்துகளில் கிரிக்கெட் விளையாடி வந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டதற்கு கடின உழைப்பே காரணம். எனது பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனே இரவு, பகல் பாராமல் பயிற்சியில் ஈடுபட்டதால் கிடைத்த பலனாக எண்ணுகிறேன். நான் விளையாடுவதை தொலைகாட்சியில் பார்த்து விட்டு எனது அம்மா கண்ணீர் மல்க ஆரவாரம் செய்து, மகிழ்ந்ததை சொந்த ஊர் திரும்பியதும் சமூக வளைதலங்களில் பார்த்தேன். அம்மாவின் உணர்ச்சி பூர்வமான பாராட்டை கண்டு ரசித்தேன். சேலத்தில் விரைவில் ரஞ்சித் போட்டி நடக்கும் அளவுக்கு விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து பல இளைஞர்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, நம் நாட்டுக்காக விளையாடுவார்கள் என நம்புகிறேன். இளம் வீரர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, கடினமாக உழைத்து, விடாமல் பயிற்சியில் ஈடுபட்டால் நிச்சயம் எந்த விளையாட்டானும், அதில் சாதனை படைக்க முடியும்.
கிரிக்கெட் உலகில் என்னை கவர்ந்தவர் சச்சின்டெண்டுல்கர். சமூக வளைதலங்களிலும், மீம்ஸ் கிரியேட்டர்களும் யார்க்கர் நாயகன் என சித்தரிப்பது பெருமையான விஷயம். கிராமப்புற, நகர்புறங்கள் என்றில்லாம் பொதுவாக இளைஞர்கள் கடினமாக உழைத்தால் கிரிக்கெட் விளையாட்டில் பிரகாசிக்கலாம். அதற்கு எடுத்துக்காட்டாக நானே அவர்கள் முன் இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள், கிரிக்கெட் சங்கங்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.