தமிழகம்

உழவர் சந்தைகள் மூலம் சேலத்தில் வாகனங்களில் காய்கறி விற்பனை

83views

சேலம் மாவட்டத்தில் காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகளை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், 11 உழவர் சந்தைகள் மூலம் 76 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை நேற்று முதல் தொடங்கியது.

கரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களில் பலர் கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க தவறியதை தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி சந்தைகள் மூட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நேற்று உழவர் சந்தைகள் மூலம் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டது.
சேலத்தில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, தாதாகாப்பட்டி, சூரமங்கலம் ஆகிய 4 உழவர் சந்தைகள் மூலம் 40 வாகனங்களை மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டன. அவற்றில் உழவர் சந்தை விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்தனர்.

இதேபோல், மேட்டூர் நகராட்சி சார்பில் 10 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, உழவர் சந்தை விவசாயிகளால் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. ஆத்தூர் நகராட்சி, எடப்பாடி நகராட்சி, தம்மம்பட்டி பேரூராட்சி மாவட்டத்தின் 11 உழவர் சந்தைகள் மூலமாக, மொத்தம் 76 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காய்கறி விற்பனை நடந்தது.

இதுதொடர்பாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாநகராட்சிப் பகுதியில் 53 வாகனங்களிலும், மாவட்டம் முழுவதும் 76 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. வரும் நாட்களில் கூடுதல் வாகனங்களில் விற்பனை நடைபெறும்.

நேற்று 204 விவசாயிகள் விற்பனையில் ஈடுபட்டனர். 58.83 டன் காய்கறிகள், 8.44 டன் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்கறிகளை வாங்கிப் பயனடைந்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே, காய்கறிக் கடைகளை திறக்கக் கூடாது என்ற உத்தரவை அறியாமல், மாவட்டத்தின் பல்வேறு இடங் களில் வழக்கம்போல நேற்று காலை காய்கறிக் கடைகள் திறந் திருந்தன. எனினும், போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் அவை மூடப்பட்டன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!