உலக மிதிவண்டி தினத்தையொட்டி கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு: ஆழ்கடல் நீச்சல் வீரர் அசத்தல்
கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஆழ்கடல் நீச்சல் வீரர் படங்களை பகிர்ந்துள்ளார்.
உலக மிதிவண்டி நாள் ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. ஒரு காலத்தில் போக்குவரத்துக்கு முக்கியச் சாதனமாக இருந்த மிதிவண்டி, தற்போது பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாக மாறிவிட்டது. சமீபகாலமாக மிதிவண்டி பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.
இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புதுவை – தமிழக ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த் கடலுக்கு அடியில் மிதிவண்டி ஓட்டினார். இதுதொடர் பான படங்களை இணையத்தில் பகிர்ந்த அவர் கூறும்போது, ‘தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். மிதிவண்டி தினத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நூதன முறையில் இம்முயற்சியை பழைய மகாபலிபுரம் காரப்பாக்கம் கடல் பகுதியில் செய் தேன். இங்கு விழிப்புணர்வுக்காக கடலுக்கு அடியில் மிதிவண்டியை ஓட்டினேன்’ என்று குறிப்பிட்டார்.