இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு நாட்கள்தான் பெருநாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு பெருநாட்களும் இரண்டு விஷயங்கள்தான் பிரதானம். ஒன்று இறைவணக்கம், மற்றொன்று ஏழைகளுக்கு உதவுதல்.
ஹிஜ்ரி ஆண்டில் முதலில் வரும் பெருநாள் ரமலான் மாதம் நோன்பிருந்தஉடன் கொண்டாடப்படுமஹ் “ஈகைத் திருநாள்.” இந்தத்திருநாளில் இறைவனை தொழ செல்லும் முன்பாக, ஏழைகளுக்கு “ஈதுல் பித்ர்” எனும் ஏழைகளுக்கான தர்மத்தை கொடுக்க வேண்டும். அதாவது, ஏழைகளுக்கு தர்மம் செய்துவிட்டுத்தான் தொழுவதற்காக பள்ளிக்குள் நுழைய வேண்டும் என்பது விதி. ஏழைகளுக்கான தர்மம் அளித்தபின்பு இறைவனை தொழ வேண்டும்.
வருடத்தின் இறுதியின் கொண்டாடப்படும் ‘தியாகத்திருநாள்’ என்ற ஹஜ் பெருநாள் நிகழ்வின்போது, தொழுகை முடித்து வந்த பின்பு , வசதி உள்ளவர்கள் ஆடு அல்லது மாடு அல்லது ஒட்டகம் போன்ற ஏதேனும் ஒரு விலங்கை பலியிட வேண்டும். பலியிட்ட பின் அதன் மாமிசத்தை தான் மட்டும் எடுத்துக்கொள்ள உரிமை இல்லை. மாறாக, அந்த மாமிசத்தை மூன்று பங்காக பிரிக்க வேண்டும். ஒரு பங்கை தனக்காகவும் மற்றொரு பங்கை தனது உறவினர்களுக்காகவும் மூன்றாவது பங்கை ஏழை எளியவர்களுக்காகவும் பிரித்து கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆக பெருநாள் என்பது பணக்காரர், ஏழை, எளியவர் என அனைவரும் கொண்டாடும் விதமாக இறைவனால் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கு 5 கடமைகள் உண்டு. 1)இறை நம்பிக்கை 2)தொழுகை3)நோன்பு 4)ஜக்காத்(ஏழைவரி) மற்றும் 5)ஹஜ் புனித யாத்திரை
அடிப்படை கடமைகள்
1) இறைநம்பிக்கை என்பது இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனுக்கு இணைதுணை யாரும் இல்லை. முஹம்நபி(ஸல்)அவர்கள் இறைவனின் தூதராக இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுகிறேன். என்று உளமாற ஏற்றுக்கொள்ளுதல். 2) தொழுகை. இது தினமும் 5 நேரம் தொழுக வேண்டும். 3)நோன்பு . இது வருடத்தில் ஒரு மாதம் முழுவதும் நோற்க வேணடும். காலை முதல் பொழுது சாயும் வரையில் உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டும். இது வருடத்தின் 9 வது மாதமான ரமலான் மாதத்தில் கடைபிடிக்க வேண்டும். 4)ஜக்காத் எனும் ஏழை வரி. அதாவது வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள பணத்தில் ஒரு வருடமும் அதற்கு மேலும் தங்கியுள்ள பணம் மற்றும் சொத்துக்களின் மொத்தத் தொகையில் 2.5 சதவிகிதம் கணக்கு செய்து அந்தத் தொகையை தனது உறவினர்கள், பகுதி வாசிகள், ஏழை எளியவர்கள் என பிரித்தோ அல்லது ஒருவருக்கோ கொடுக்க வேண்டும். 5) ஹஜ் புனித யாத்திரை. வசதி படைத்த முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருதடவையேனும் புனித மக்கா நகரில் உள்ள கஃபத்துல்லா என்னும் இறை இல்லம் சென்று அங்கு தொழுகவேண்டும். மேலும் அங்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். இந்த 5 கடமைகளையும் முஸ்லிம்கள் செய்ய வேண்டும்.
ரமலான் மாத சிறப்புகள்
இப்போது ரமலான் மாதம் என்பதால் அதன் சிறப்புகளை தெரிந்து கொள்வோம். ஒவ்வொரு மதத்திலும் மாத கணக்கீடு உண்டு. இதைப்போல் அரேபிய நாடுகளிலும் இஸ்லாமிய மாதக் கணக்கீடு உள்ளது. கணக்கிடப்படும் 12 மாதங்களாவன : முஹர்ரம். ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமியத்துல் அவ்வல், ஜமியத்துல் ஆகிர், ரஜப், ஸஃபான், ரமலான், சவ்வால், துல் காயிதா மற்றும் துல் ஹஜ்.
இதில் 9 வது ரமலான் மாதம் ஆகும். இந்த மாதம் முஸ்லிம்களால் மிக புனிதமாக பின்பற்றப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் பகலில் உண்ணாமல் பருகாமல் விரதம் ( நோன்பு ) இருப்பார்கள். இந்த மாதத்தில்தான் முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் திருக்குர்ஆன் இறைவனால் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளப்பட்டது.
ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘‘ரமலான் மாதம் எத்தகையது என்றால் அந்த மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியில் தெளிவான அறிவுரைகள் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதுமான குர்ஆன் அருளப்பட்டது’’ (2:185)
ஷஅபான் மாதத்தின் இறுதியில் நபிகளார் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் போது, ‘‘மக்களே! மகத்துவம் நிறைந்த ரமலான் மாதம் நெருங்கி விட்டது. இந்த மாதத்தின் ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் நமக்குக் கடமை ஆக்கியுள்ளான். இது பொறுமையின் மாதமாகும். மேலும் இந்த மாதம் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், தேவையுள்ளோர் மீது அனுதாபமும் பரிவும் காட்ட வேண்டிய மாதமாகும்’’ என்று கூறினார்கள்.
ரமலான் மாதத்தில் அதிகமான வணக்க வழிபாடுகள் செய்வது சிறந்தது. ரமலான் மாதத்தின் முதல் மாதமான ஷஅபான் மாதத்தின் இறுதியில் நபிகளார் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் போது, ‘‘மக்களே! மகத்துவம் நிறைந்த ரமலான் மாதம் நெருங்கி விட்டது. இந்த மாதத்தின் ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் நமக்குக் கடமை ஆக்கியுள்ளான். இது பொறுமையின் மாதமாகும். மேலும் இந்த மாதம் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், தேவையுள்ளோர் மீது அனுதாபமும் பரிவும் காட்ட வேண்டிய மாதமாகும்’’ என்று கூறினார்கள்.
சிறந்த நல்லகாரியங்கள் மற்றும் தான தருமங்களுக்கு மற்ற நாட்களில் செய்வதைவிட 70 மடங்கு நன்மைகளை இறைவன் வழங்குகிறான். அந்த அளவிற்கு புனித ரமலான் மாதம் நற்பேறு உடையதாகும். இந்த புனித மாதத்தில் திருக்குர்ஆன் இறைவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
நோன்பு
நபிமொழிகளில் நோன்பின் நற்கூலி குறித்து மிகவும் அதிகமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
‘‘நோன்பாளிகள் சொர்க்கத்தில் ஒரு சிறப்பான வாசல் வழியே நுழைவார்கள். அதற்கு ‘ரய்யான்’ என்று பெயராகும். நோன்பாளிகள் அதன் வழியே நுழைந்து விட்டால், பிறகு அந்தக் கதவு மூடப்படும். பிறகு அந்த வாயில் கதவு வழியாக எவரும் சுவனத்தில் நுழைய முடியாது’’.
‘மறுமை நாளில் நோன்பு பரிந்துரை செய்யும்: ‘இறைவா! நான் இந்த மனிதனைப் பகலில் உண்பதில் இருந்தும் பருகுவதில் இருந்தும் மற்ற இன்பங்களில் இருந்தும் தடுத்து வைத்திருந்தேன். இறைவா! இந்த மனிதருக்காக நான் செய்யும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!’. மேலும் இந்தப் பரிந்துரையை இறைவன் ஏற்றுக்கொள்வான்’’.
நோன்பின் மகத்துவத்தை உணர்த்தும் பல நபிமொழிகள் உள்ளன.
‘‘மக்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளை முழுமையாக அறிவார்களேயானால், வாழ்நாள் முழுவதும் ரமலானாகவே இருக்கக் கூடாதா என்று ஏங்குவார்கள்’’ என்பது நபிமொழியாகும்.
ஏழைகளின் பசியை உணர்வது மட்டுமல்ல இறைவனை நெருங்குவதற்கு இந்த உண்ணா நோன்பு நமக்கு வழி வகுக்கிறது.
-
கமால் பாஷா