124
எப்போதும் போல அந்த அரசனுக்கு அன்று அதிகாலையும் கனவு வந்தது. ஒளி மிகுந்த முகத்தையுடைய சிறுபாலகன் அரசனுக்கு ஒரு பூமாலை அளிக்கிறான். பூக்கள் தங்கம் போல மின்னுகின்றன. ஏனோ எதுகிடைத்தாலும் அனந்தனுக்கு அர்ப்பணிக்கும் அவனுக்கு அந்த மாலையை தானே போட்டுக்கொள்ளவேண்டும் என ஆர்வம் அதிகரிக்கிறது. தன்னைத்தானே சமன் செய்துகொண்டு தலையை உலுக்கவே சட்டென விழிப்புத்தட்டி விடுகிறது.
விடிதலுக்கான முஸ்தீபுகளில் அந்த அரண்மனை இருக்கிறது. அகில் புகையிட்டும் பள்ளியறைக் கதவின் முன்னால் வீணையை மீட்டிக்கொண்டும் அரண்மனை இசைஞர்கள் சிலர் பூபாளம் பாடிக்கொண்டும் இருந்தனர். இன்னொருபுறம் பூஜைக்கான பறித்து வைக்கப்பட்டிருந்த மலர்களின் மணமும் குளியல் கட்டத்தில் அரைத்த சந்தணக்குழம்பின் மணமும் அவனை சுய நினைவுக்கு கொண்டுவரவே மன்னன் எழுந்திட அவருக்கென காலைப்பள்ளியெழுச்சி உலகம் நிறைந்த பரம்பொருளின் பெயரால் பாடப்பட்டது.
மன்னன் கிளம்பியதும் பள்ளியறைக் கதவுகள் சடாரென திறக்கப்பட இரவுமுழுவதும் எரிந்துகொண்டிருக்கும் விளக்குகளை பணியாட்கள் அணைத்துக்கொண்டே வந்த காட்சிதான் முதலில் தெரிந்தது. வழக்கமாக மலர்கள் ஏந்தி நிற்கும் பரிசேகரன் பிரத்யும்னனை காணவில்லை. அன்றைய ராசி பலன்களையும் அவன் தான் சொல்லுவான். அருகிலிருந்த சேவகனிடம் பிரத்யும்னனைப்பற்றி கேட்க எத்தனிக்கையில் அமைச்சர் வந்தார்.
வழக்கமாக அந்த அதிகாலையில் அவர் வருவதில்லை. சபை ஆரம்பிக்கும் முன்னர் மன்னர் அறைக்கு வந்து அன்றைய திட்டமிடுதல் பற்றி ஆலோசனையில் கலந்துகொள்வார். மிகச்சிறந்த அறிவாளி நாட்டுமக்கள் அரசனை தெய்வமென கொண்டாடுதலில் அமைச்சருக்கு பெரும்பங்கு இருக்கிறது. மக்கள் குறைகளை கேட்டு செயலாற்ற அவரின் ஒற்றர்படை நாடுமுழுவதும் மிகப்பலமாய் இருந்தது.
“வாருங்கள் அமைச்சரே..இதென்ன அதிகாலை விஜயம்?”
” மன்னா ஏனோ தெரியவில்லை இன்று காலை எழுந்தவுடன் உங்களைப்பார்க்க வேண்டும் என்ற உந்துதல்..இன்று முழுவதும் உங்களோடிருக்க வேண்டும் என உள்மனம் சொல்கிறது”!.
“ஹ்.ஹா..அது சரி ..காலை உணவு அருந்திவிட்டீரா.?.”
“இல்லை மன்னா பூஜையிலிருந்து நேரே வருகிறேன்!”..
“சரி வாருங்கள்.. என்றபடி உணவறைக்கு போனார்.
மிகப்பெரிய உணவறையில் மன்னன் தங்க ஆசனப்பலகையும் மந்திரி வெள்ளி ஆசனப்பலகையிலும் அமர..தேங்காய்ப்பால் களியும், பழக்கலவைகளும் பனங்கல்கண்டு பாலும் உண்டதும் ஒருகுவளை சுடு நீரும் அருந்த கொடுத்தனர் பணியாளர்கள்.
இருவரும் அங்கிருந்து அரசவைக்கு கிளம்பினர்..வழியில் ஒற்றர் தலைவன் எதிர்ப்பட்டார்..மன்னனை வணங்கி..
“மன்னா நாடுமுழுவதும் உங்களுடைய சிலை நிறுவப்பட்டு மக்கள் உங்களை தெய்வமாக பூஜை செய்கின்றனர்..வளையாத கோன் மாந்தருள் இறையன கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் உங்கள் நாமாவளிகள் பூஜிக்கப்படுகின்றது” என்றார்.
உள்ளூற கர்வமடைந்தாலும் அதைக்காட்டிக்கொள்ளாத மன்னர் மக்கள் வீணாக மனிதனை உயர்த்துகின்றனர்..என் கடமையை நான் செய்கிறேன்..எனினும் எமது ஆலயங்கள் நிறுவப்பட்ட ஊர்களுக்கு நிவந்தங்கள் அளியுங்கள் என்றபடி நடந்து செல்லலானார்.
பெரும் பக்தப் பிரகலாதனின் வழித்தோன்றலான அம்மன்னன் இறைவனை மறந்தாலும்…உண்மையில் மக்கள் நலனில் அக்கரை கொண்டவனான காரணத்தால் இயற்கை அன்னை அடுத்து நடக்கப்போகும் செயலகளை காண காத்திருந்தாள்.
உயிரோடு இருப்பவர்க்கு சிலைவைத்து தொழுதால் அதைத்தொழுபவரின் பாவக்கணக்குகள் சிலையாக. நிற்பவரைச்சேரும் என்பதால் அம்மன்னன் தன்னை அறியாமல் சுமக்கும் பாவமூட்டைகளில் இருந்து இறை அவனைக்காக்கட்டும் என்று வேண்டிக்கொண்டாள் பொறுமையின் சிகரமான பூமாதேவி.
அரசவை வழக்கத்தை விட அன்று பிரகாசமாய் இருந்தது. மன்னன் மனதில் மிகப்பெரும் நிம்மதி சூழ்ந்து இருந்தது. காரணம் தெரியாத புன்சிரிப்பு அவன் இதழில் இருந்தது. பண்டிதர்களும் யாசகர்களுமாய் அரசவை நிரம்பி வழிந்தது. யாசகர்களை காக்கவைக்கும் பழக்கம் அந்த அரசவையில் இல்லாததால் வரிசையாக வரும் யாசகர்களுக்கு தேவையானதை மன்னன் தன் கையாலேயே அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருந்தான்.
அவ்வரிசையில் கடைசியாக ஒரு அந்தண சிறுவன் வந்தான். கரிய நிறமும் சிவந்த அழகிய பெரிய விழிகளுமாக பேரழகனாய் இருந்தான். ஏனோ மன்னனுக்கு அவனை அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. இடுப்பில் சிறிய வெள்ளைத் துண்டு அணிந்து கழுத்தில் துளசி மாலை அணிந்தவன் அரசனிடம் வந்து இரு கையும் ஏந்தி நின்றான்.
ஏந்திய கையை அப்படியே பிடித்துக்கொண்டான் அந்த அரசன். தாமரைப்பூவின் குளுமை அந்த கையில் இருந்தது. என்னப்பா வேண்டும் உனக்கு என்றான்..
ஆலயத்தில் குடியிருந்தேன். தற்போது இடமின்றி தவிக்கிறேன்..மூன்றடி மண் தானமாக கொடுங்கள் தங்கிக்கொள்கிறேன் என்றான்.
குழந்தாய் உன் காலடி மிகச்சிறியது. மூன்றடி இடம் உன்னால் நின்று திரும்ப இயலாது என்றார். ஏனோ உன்னை மிகப்பிடிக்கிறது எனக்கு. ஒரு கிராமம் தருகிறேன். ஆலயம் அமைத்துக்கொள் மகிழ்ச்சியாய் இரு என்றார்.
அப்போது அந்த கூட்டத்தைப்பிளந்து கொண்டு பிரத்யும்னன் வந்து வணங்கினான். கையில் ஓர் ஓலைச்சுருள். அரண்மனை சோதிடர் இன்று ஒரு நாள் மட்டும் மன்னன் தானம் அளிக்காமல் தவிர்த்திட வேண்டும் என எழுதியிருந்தார். தினமும் காலை அவர்தான் நாள் கணித்து அதிகாலை மன்னனுக்கு அனுப்புவார். அன்று காலை சோழி விழாமல் போக்கு காட்டி ஒருவழியாக ஏதோ அபத்தம் நடக்க போவதாக யூகித்து அதை பிரத்யும்னன் கொண்டு வருகையில் அவன் குதிரை தறிகெட்டு ஓடி குளத்தில் தள்ளியது. அதையெல்லாம் தாண்டி ஓலையோடு அரசவை வந்து சேர்ந்தான்.
ஆனால் அரசர் தான அனுஷ்டானங்கள் முடித்திருந்தார். கடைசியான சிறுவனின் கையை பற்றிக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார் இனி தோஷமில்லை என சமாதானம் அடைந்தான்.
பிரத்யுன்மனை பார்த்தாலும் அதில் கவனம் கொள்ளாது மன்னன் சிறுவனை நோக்கி கேட்டுக் கொண்டு இருந்தார்.
அவன் மூன்றடி போதும் என பிடிவாதம் பிடித்தான். கடைசியில் மன்னன் சம்மதம் தெரிவித்தார். எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள் என்றார்.
சத்தியமாக என்று அந்த பிள்ளை கேட்டு உறுதிப்படுத்தியது. அருகிலிருந்த கமண்டல நீரை அவன் கையில் ஊற்றி சத்தியமாக..நீ எங்கு கேட்கிறாயோ அங்கு மூன்றடி உனக்கு என்றார் மன்னர்.
சரி என்று அரண்மனை முற்றத்திற்கு அழைத்துப் போனது அந்தப்பிள்ளை..
மக்கள் பார்க்க மன்னன் பார்க்க, ஆவினங்கள் பார்க்க மரங்கள் மலைகள் கடல்கள் பார்க்க உயர்ந்த அந்த சிறுவன் த்ரிவிக்ரமனாகி, முதலடியில் பூமி முழுவதும் அளந்தான் நானே விஷ்ணு இப்பூமி பரிபாலகன் என்றான்..
இரண்டாம் அடியில் வானம் அளந்தான்..நானே பிரபஞ்சம் அண்ட சராசரங்கள் என்னுடையதென்றான்..
மூன்றாம் அடி மூன்றாமடி எங்கு வைப்பது மஹாபலி..இனி எந்த இடம் உனக்கென இருக்கிறது சொல் என்றான்.
மன்னன் தன்னை மறந்தான், தன் பதவி மறந்தான் தனக்கு மறந்து போன பல்லாயிரம் வருட ஆன்ம பதிவுகளை நினைத்தான்..எல்லாம் எல்லாம் இதோ எதிரில் நிற்பவனே..இவனிலிருந்து தான் நான் ஆரம்பித்திருக்கிறேன். அவனின் பிம்பமாகத்தான் நானிருக்கிறேன். வந்தவன் மண்ணைக் கேட்கவில்லை அவன் என்னைக்கேட்கிறான். என்னுடையதெல்லாம் அவனுடையது நான் யார் அவனுக்கு பிச்சையிட என்று உணர்ந்தான்.
கிரீடத்தை கழற்றினான், வாளை அவன் பாததில் வைத்தான் மண்டியிட்டான் தன் தலையைக் குனிந்து முழந்தாளிட்டான்..குருவே..இப்பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தேன்..உங்களுக்கு கொடுக்க என் தலையிருக்கிறது. ஆணவத்தின் விளை நிலம்..என் பூமி அதுதான் மூன்றாமடிக்காக என்னைத்தருகிறேன் என்றான்..
வானளந்தவன் சிரித்துக்கொண்டான் அவன் கேட்டதும் அதுதானே அதற்காக தானே இந்த சுற்றி வளைப்பு நாடகம்..
மகிழ்வோடு அவன் உச்சியில் உள்ளங்கால் வைத்தான். மஹாபலி தன்யனானான். பூமாதேவியின் தனையனானான். புவிக்கு மேல் திரிவிக்ரமன் நிறைந்தான். பூமிக்கடியில் இருக்கும் அத்துணை உயிர்களுக்கும் மஹாபலி மன்னனானான்.
ஆனாலும் அவன் கண்ணில் ஏதோ குறைகண்டான் உலகையாளும் நாயகன். என்னவென்றான் வருடம் ஒருமுறையாவது என் மக்களைக்காண அனுமதிக்க வேண்டும் என்றான். சத்தியமும் சனாதனமும் நிறைந்த இம்மண்ணில் வருடம் ஒருமுறை எழுந்தருள்வாய் அன்று உலகம் முழுவதும் உனக்கான வரவேற்பிருக்கும் என்றபடி ஆசிதந்தார் திரிவிக்ரமர். மகிழ்ச்சியோடு பாதாளம் கிளம்பினார் மகாபலி.
இறைவனே யாசகம் பெற்ற பெருமைகொண்ட மன்னர்கள் வாழ்ந்தது நம் பாரதம். இங்கு பிறப்பதே நாம் செய்த புண்ணியம் தான்.
-
கமலி ஆனந்த்
add a comment