செய்திகள்தமிழகம்

இன்று முதல் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்.. ஊரடங்கில் சிறப்பு ஏற்பாடு !!

73views

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது தளர்வில்லா ஊரடங்கு ஜுன் 7வரை நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. எனினும் பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மளிகை கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால், மக்கள் தேவையை கருத்தில்கொண்டு நடமாடும் மளிகை கடைகள் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்தது. அதன்படி ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் வாடிக்கையாளர் கேட்கும் பொருட்களை வீடு தேடி கொண்டுவழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கோயம்பேடு மற்றும் கொத்தவால்சாவடியில் இருந்து தேவையான மளிகைப்பொருட்களை கொள்முதல் செய்து குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வாகனங்களுக்கு உரிய அனுமதி அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் இந்த பணியில் ஈடுபட இருக்கும் ஊழியர்களுக்கு அனுமதிச்சீட்டு நேற்று வழங்கப்பட்டது.

இந்த அனுமதிச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே வீடு தேடி மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டத்தில் இணைந்து பணியாற்ற முடியும். செல்போன் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் கோரும் மளிகைப்பொருட்களை எடுத்துச் செல்வோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய கடைகளில் இ-வர்த்தகம் மட்டுமே செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று (மே 31) முதல் நடமாடும் மளிகை கடைகள் சேவை தொடங்குகிறது. தற்போது, நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனையில் ஈடுபடுவோரும், மளிகைப்பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையில் ஈடுபடவுள்ள வியாபாரிகள் பற்றிய விவரங்கள் www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!