இன்று நீட் தேர்வு.. தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. முதல்முறையாக தமிழில் தேர்வு!
கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வானது இன்றைய தினம் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு பொசுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த தேர்வால் தங்கள் மருத்துவ கனவு கலைந்து போனதால் அரியலூர் அனிதா உள்பட ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டார்கள். எனவேதான் நீட் தேர்வை உயிரைக் குடிக்கும் அரக்கனாக பார்க்கிறார்கள்.
உலகில் கொரோனாவால் 22.50 கோடி பேர் பாதிப்பு – அமெரிக்காவில் 70 ஆயிரமாக குறைந்த கேஸ்கள்!
நீட் தேர்வு நடத்தப்படுவது ஒரு புறம் இருந்தால் இந்த தேர்வை காரணம் வைத்து மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியாக தொல்லை கொடுப்பதை யாராலும் ஏற்க முடியவில்லை. காதில் தோடு, தலையில் கிளிப், மூக்கில் மூக்குத்தி, வாட்ச் உள்ளிட்ட பொருட்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போதாக்குறைக்கு மாணவிகள் துப்பட்டாவை கூட அணியக் கூடாது என்பது பெற்றோரை வேதனையடையச் செய்கிறது.
இப்படி பல்வேறு எதிர்ப்புக்குள்ளான இந்த நீட் தேர்வு கடந்த முறை கொரோனா ஊரடங்கால் ஒத்திக்கப்பட்டது. இந்த தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வு இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ், மலையாளம், பஞ்சாபி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படவுள்ளது.
மேலும் மாணவர்களின் நலன் கருதி இந்தியா முழுவதும் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 லிருந்து 198 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை எழுத 1,10,971 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 40,376 மாணவர்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவரை சேர்ந்த ஒருவரும் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளார்கள்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 17,992 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. பொதுவாக நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளுடன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இணைந்து தேர்வு நடத்தப்படவுள்ளது. கைகளில் கிளவுஸ், மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
நீட் தேர்விலிருந்து விலக்களிக்க நாளை தமிழக சட்டசபையில் அந்த தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெறாது. எனவே குடியரசுத் தலைவரின் நடவடிக்கையை பொருத்து தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் என தெரிகிறது.