இந்தியா உள்ளிட்ட 192 நாடுகள் பங்கேற்பு துபாய் எக்ஸ்போ- 2020 கோலாகல தொடக்கம்: அடுத்தாண்டு மார்ச் வரை நடைபெறும்
கொரனாவால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கிய நிலையில், தற்போது பல்வேறு நாடுகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பின் உலகின் மிகப் பெரிய நிகழ்ச்சியாக, சர்வதேச அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற கூடிய, ‘உலக கண்காட்சி’ இம்முறை துபாயில் நடைபெறுகிறது. இதற்காக, ‘துபாய் எக்ஸ்போ- 2020’ என்ற பெயரிலான பிரமாண்ட கண்காட்சி, துபாயில் நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது. இது, அடுத்தாண்டு மார்ச் வரை வரை நடைபெறுகிறது. இதில், 192 நாடுகள் பங்கேற்கின்றன.
தொடக்க விழாவில் முகப்பு பகுதியில் அல்வாசல் பிளாசா அரங்கில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில், பல்வேறு நாடுகளின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. இதில், அமீரக துணை அதிபர் சேக் முகமது பின் ராசித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் சேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக தலைவர்கள் பங்கேற்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
சர்வதேச நாடுகள் தங்கள் நாட்டின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்கள், மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு படைப்புகளின் பொதுமக்கள் பார்வைக்காக அரங்கங்கள் அமைத்துள்ளன. இந்தியா சார்பிலும் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை காண, உலக நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர்.
2.5 கோடி பார்ப்பார்கள்
* இந்த கண்காட்சியை மொத்தம் 2.5 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
* இதற்காக துபாய் நகரத்தில் உள்ள ஓட்டல்களின் அறைகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
8 எமிரேட்ஸ் விமான நிறுவனமும் கொரனாவால் குறைக்கப்பட்ட விமானங்களை மீண்டும் இயக்க தொடங்கியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இந்த கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின், ‘பிர்தர்ஸ்’ குழுவும் பங்கேற்றது. இந்த இசைக்குழுவில் 23 நாடுகளை சேர்ந்த 50 பெண் இசைக் கலைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது.