தமிழகம்

ஆளுங்கட்சியினர் மிரட்டுவதால் அரசு அதிகாரிகள் அச்ச உணர்வுடன் உள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

47views

ஆளுங்கட்சியினரின் மிரட்டலால் தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஒருவித அச்ச உணர்வுடன் பணியாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் ஊக்குவிக்கப்பட்டனர். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதுதிமுக ஆட்சியில் சமூக விரோதசெயல்களில் ஈடுபடும் ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், சாதகமாக செயல்படாத அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் செய்தி கள் வருகின்றன.

ராதாபுரம், இருக்கன்குடி பகுதிகளில் உள்ள கல்குவாரியில் முறைகேடாக அதிகளவு வெட்டி கடத்தப்படுவதை கண்டறிந்து, கடத்தலில் ஈடுபட்ட திமுகவினருக்கு ரூ.20 கோடி அபராதம் விதித்த சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் சந்தோஷ்குமாரை, ஆளுங்கட்சி பிரமுகர்களும், திமுக ஒப்பந்ததாரர்களும் செய்யாத பணிகளுக்கு போலியாக ரசீது தயாரிக்க அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் சந்தோஷ்குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசு அலுவலர் சங்கங்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபரில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன், திமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு தலைவர் முறைகேடாக டெண்டர் வைக்க தன்னை வற்புறுத்துவதாகக் கூறி, வேறு இடத்துக்கு பணிமாறுதல் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்எழுதிய செய்தியும் வெளியாகியது.

ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியதலைவர் வெங்கடாசலம் மரணமடைந்தது தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரியிருந்தேன். தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதனால் அதிகாரிகள் ஒருவித அச்சஉணர்வுடன் பணியாற்றி வருவதாக அரசு அலுவலர் சங்கங்கள் தெரி விக்கின்றன.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் சந்தோஷ்குமார் மரணம் குறித்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.தவறு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவினரின் கனிமக் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளின் பணியிட மாறுதலை ரத்துசெய்ய வேண்டும். அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்றவும் சட்டத்தின் ஆட்சியின் நிலை நிறுத்தவும், அதிகாரிகளை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!