தமிழகம்

அதிமுக உட்கட்சி தேர்தல்;இன்று தொடக்கம்!

56views

அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல்கள் முதற்கட்டமாக இன்றும்,நாளையும் நடைபெறுகின்றன.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி,அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து,அதிமுக கிளை நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல் இன்று (13.12.2021) முதல் 23.12.2021 வரை நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இதற்காக,அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான மினிட் புத்தகம், விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றி படிவம் முதலானவற்றை முன்னதாக அதிமுக தலைமை கழகத்தில் இருந்து பெற்றுச் சென்றனர்.மேலும்,மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய,பேரூராட்சி,நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையர்கள் பட்டியலும் முன்னதாகவே வெளியிடப்பட்டது.

இந்நிலையில்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி – 30, பிரிவு – 2ன்படி “கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப முதல் கட்டமாக, தமிழ் நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கழக அமைப்புத் தேர்தல்கள் இன்று முதல் 23.12.2021 வரை இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!