செய்திகள்தமிழகம்

பத்திரப்பதிவுத்துறை அமைச்சரின் தொகுதியில் தொடரும் அவலம் – ஓட்டு வாங்க வந்ததோடு சரி யாரயும் காணல கொதிக்கும் தொகுதி மக்கள்..

51views

மதுரை: பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 4ஆவது வார்டுக்கு உட்பட்ட பெரியார்நகர் 2வது தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் பல முறை அமைச்சரிடம், அந்த வார்டு திமுக மாமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்தும் கூட கண்டுகொள்ளாத நிலையில் வீடுகளுக்கு புழுக்கள் உள்ளே சென்று தூங்கவிடாமல் அவதியுறுவதாகவும், குழந்தைகள், முதியவர்களுக்கு தொடர்ந்து தொற்று நோய்கள் பரவி அவதியுற்று
வருகின்றனர்.  நாள்தோறும் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணாக்கர்களும் கூட செல்ல முடியாத அவலம் நீடித்துவருகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கோசாகுளம் பகுதியில் அமைச்சர் மற்றும் மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலையசெய்தபோது காவல்துறையினரை பாதிக்கப்பட்ட பகுதிக்குள் வந்தால் மட்டுமே கலைவதாக கூறி பின்னர் அதிகாரிகளை அழைத்துசென்றனர். பத்திரப்பதிவுத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலை தொடர்கிறது.
போராட்டத்தின் போது வேதனை அடைந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி கண்டுகொள்ளாத நிலையில் சாக்கடையை அள்ளிச்சென்று மாநாகராட்சி அலுவலகத்தின் முன்பாக கொட்டுவோம் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அந்த பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட மாநகராட்சி கழிப்பறை திறக்கப்படாத நிலையில், அப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளுக்கு கூட காட்டுப்பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது.

இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள்  இந்த தொகுதி எம்எல்.ஏ மற்றும் கவுன்சிலர் ஓட்டு கேட்டு வந்ததோடு சரி ஆளயே காணோம் நாள்தோறும் மக்கள் கழிவுநீரால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளோம் என தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!