கட்டுரை

சென்னை தினம் 22 ஆகஸ்ட்

101views
“நீங்க சென்னையா…”
“அட சென்னை மாதிரி தெரியலையே …”
“சென்னையின் வாசனையே இல்லாம இருக்கீங்களே …”
-எதிர்படுகிறவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள். சென்னைக்கென்று ஒரு வாசம் இருக்கிறது. சென்னைக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. சென்னைக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது.
-இன்று எல்லோருக்குமாய் இருக்கிறது சென்னை …
சில சமயம் நான் மத்திய சென்னைக்காரனாக –
ஒரு சில நேரம் நான் தென் சென்னைக்காரனாக –
எப்போதாவது வட சென்னைக்காரனாக இருக்கிறேன் – அல்லது இருக்கும் சூழலை உருவாக்கிக் கொள்கிறேன்.
இன்னும் நினைவிருக்கிறது ராயபுரம் கல்மண்டபம் இறங்கி வட சென்னை நண்பர்களை சந்திக்க சென்ற எண்பதுகளில் காலம்…. தியாகராய நகரில் பாண்டிபஜாரில் சரவணா ஸ்டோர் பிரமாண்டங்களில் தொலைந்த தொண்ணூறுகளின் காலம்… மணல் புதைய நடந்த அஷ்டலக்ஷ்மி கோவில் பெசன்ட்நகர் எலியட் கடற்கரையும், உழைப்பாளர் சிலைக்கருகில் கவிதைகள் பேசிய மெரீனா கடற்கரையும், 12B பேருந்துக்காக கலங்கரை விளக்கத்தில் இருந்து நடந்தே சென்ற பட்டினப்பாக்கம் கடற்கரையும் …இன்னும் …. இன்னும்..
ஆல் இந்தியா ரேடியோவின் காமராஜர் கடற்கரை சாலை இன்னும் எனக்கு பூப்பூக்கும் நந்தவனமாக …
-கட்டுமரமாய் மிதக்கிறது பால்யங்களின் காலம்.
உலகத்தின் உயரமான கட்டிடம் எல் ஐ சி -என நம்பிய குழந்தைத்தனத்துடன் சுற்றித்திரிந்த சென்னையின் அண்ணாசாலை, பழைய புத்தகங்களால் நிரம்பிய குவியலுக்குள் என்னையே கண்டெடுத்து புன்னகைத்துக்கொண்ட மூர்மார்க்கெட் . அவுஸ் ஓனர் ராமச்சந்திரன் வேலைசெய்த சென்னையின் மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிடம் , பாரிமுனையின் எதிரில் அடிக்கடி நண்பர்களுடன் தேனீருக்குள் சட்டம் பேசிய உயர்நீதிமன்றம், ஒருகாலத்தில் ஊருக்கு செல்ல காத்திருந்த திருவள்ளுவர் பேருந்து நிறுத்தம்,
கனவுகளில் விளக்கேற்றிய ஆனந்த விகடன் வாங்கிய குறளகம் பக்கத்தில் இருந்த ஒரு பேப்பர் கடை…
அன்று பாரிமுனையில் இருந்த கொத்தவால் சாவடி , கோயம்பேடு பக்கம் வந்து நின்றதும்,திருவள்ளுவர் பேருந்து நிறுத்தம் இடம்மாறி நூறடி சாலையில் புறநகர் பேருந்து நிறத்தமாக கண்சிமிட்டியதும் ….இன்னும் மாஞ்சா நூலுடன் காற்றாடியை ஒரு ஆடிமாத மதியான வெயிலில் வியர்வைத்துடைத்தபடி விட்டுக்கொண்டிருந்த அரை டிராயர் பையனாகவே இன்னும் இருக்கிறேன்…
நண்பன் ஸ்ரீராம் வீடு இருந்த எழும்பூர் ரயில் நிலையம்- கன்னிமரா நூலகத்தில் புத்தகங்களுடன் புத்தகமாக இருந்த இரண்டாம் தளம்….
முதல் முறையாக பூனா செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றது ….காயத்ரிதேவியை சந்திக்க புறநகர் நிலையம் தேடி முதல் முறையாக அலைந்தது ….
மறக்க முடியுமா?
மறக்க முடியாத சென்னையின் நினைவுகளை ஒரு மழைப்பதிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்…
சென்னையின் மாநகர பேருந்துகளில் நீங்கள் பயணித்து இருந்தால் தெரியும்…சென்னையின் சாலைகளும் குறுகிய சந்துகளில் ஆட்டோக்கள் லாவகமாக நுழைந்து செல்லும் சாமர்த்தியமும் கொஞ்சம் பிரமிப்பை உண்டுபண்ணவே செய்யும்…
கசகசப்புகளுக்கிடையில் ஒலிக்கும் சிங்கார சென்னையின் தமிழும், நசநசத்த பண்பலைகளின் ஆரவாரமான நிகழ்ச்சி தொகுப்புகளும் சென்னைவாசிகள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை….
கெட்டாலும் பட்டணம் போகாதே ….. சொன்னவர்கள் தான் பட்டணம் போய் எப்படியாவது பிழைத்துக்கொள் ..இப்படியும் சொல்லி இருக்கிறார்கள்….
வந்தாரை வாழவைக்கும் சென்னையில் பிறந்தவன் என்கிற கர்வம் இன்னும் வற்றிப் போகவில்லை.
கூவத்தின் நிழலில் இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கறது நேற்றைய ஜீவ நதி ..
கோடம்பாக்கமும் – கோட்டையும் அடிக்கடி பார்த்தவன் ..இப்போது அமீரகத்தின் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கிறேன் …
சென்னை தினத்திற்கு ஆயிரம் முத்தங்கள் …
சத்தம் போட்டு சொல்லிக்கொள்ளட்டுமா..
” இன்ன பாக்குற மாமு நானும் மெட்றாஸ் காரன்தான்பா”
RJ நாகா

 

 

 

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!