சினிமாவிமர்சனம்

சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க எடுத்திருக்கும் முயற்சி

154views
தமிழ்க்குடிமகன் : திரை விமர்சனம்
லட்சுமி கிரியேஷன்ஸ் இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “தமிழ்க்குடிமகன்”
சமீபகாலமாக தமிழ் சினிமாக்கள் ஜாதி பிரச்சனையை மையப்படுத்தி பேச ஆரம்பித்திருக்கும் வேளையில் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது இந்த படம்.
திருநெல்வேலியில் நடப்பதாக கதை. தன் குலத் தொழிலை செய்ய மறுக்கும் ஒருவனை ஆதிக்க வர்க்கம் எந்த அளவிற்கு நசுக்க பார்க்கிறது என்பதை வலுவான கதைக்களத்துடன் சொல்கிறது படம்.

சின்னசாமி – தன் கடைசி வாய்ப்பான விஏஓ தேர்வை எப்படியாவது எழுதி வேலைக்கு சேர்ந்துவிடவேண்டும் என்கிற எண்ணத்துடன் கிளம்புகிறார். அப்போது தான் தெரிகிறது அவர் அந்த ஊரில் எந்த இறப்பு நிகழ்ந்தாலும் கடைசி ஈமக்காரியங்கள் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர் என்று. அங்கு பெரிய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இறந்து போக, காரியம் செய்ய நிர்பந்த படுத்தப்படுகிறார் சின்னசாமி.
இதனால் அவர் விஏஓ தேர்வை எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார். வேறு வழியில்லாமல் பால் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் போது மேல்சாதி வகுப்பினரின் அடக்குமுறைக்கு ஆட்படுகிறார். மருத்துவம் படிக்கும் அவரின் சகோதரி வள்ளி , கிட்டு என்கிற மேல்சாதி பையனை காதலிக்கிறார். இதனால் ஆதிக்க வர்கத்தின் தாக்குதலால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் வெளியூரில் தங்கி படிக்கும் சூழ்நிலை அவரின் சகோதரிக்கு உண்டாகிறது.
மனதளவிலும் உடல் அளவிலும் அதிகம் பாதிக்கப்பட்ட சின்னசாமி இனி தன் குலத்தொழிலை செய்வதில்லை என முடிவெடுக்கும் போது அந்த ஊரின் பெரியவர் இறந்து விடுகிறார். அவருக்கு இறுதி காரியங்கள் செய்ய அழைக்கும் போது உண்டாகும் போராட்டமே படத்தை அடுத்தக் கட்டத்திற்கு இட்டு செல்கிறது. அம்மா, மனைவி, மகன் என ஒட்டுமொத்த குடும்பமே பாதிப்பிற்குள்ளாகும் போது எடுக்கும் புது அவதாரமே தமிழ்க்குடிமகன்.

சின்னச்சாமியாக சேரன். கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். பலக் காட்சிகளில் எதார்த்தமாக அவரது நடிப்பு இருப்பது கதைக்கு பலம் சேர்க்கிறது. சுடலையாண்டியாக வரும் லால் அப்படியே ஊரின் பெரியமனிதர் தோரணையை வெளிப்படுத்துகிறார். காந்தி பெரியாராக வருகிறார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. அவருக்கு ஒரு பிளாஷ் பேக். நியாயமான முறையில் அதை காட்டியிருப்பது நேர்த்தி.  வழக்கறிஞராக வரும் SA சந்திரசேகர், எஸ்பி அந்தோணிசாமியாக வரும் சுரேஷ் காமாட்சி, அரசு வழக்கறிஞராக வரும் மயில்சாமி, ரவிமரியா இப்படி பல பாத்திரங்கள். யாரையும் வீணடிக்காமல் கதையின் தேவைக்கேற்ப பயன்படுத்திருப்பது பார்வையாளர்களை கவர்கிறது..
சாம் CS இன் இசையில் சிக்கிட்டேனே பாடலும், வானம் பார்த்தேன் பாடலும் அதற்கான இசை மெனக்கெடலும் பாராட்டும்படி இருக்கிறது. கிராமிய பின்னனியில் சில பாடல்களை பயன்படுத்தியிருப்பதை வரவேற்கலாம்.
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு பாடல்களில் விளையாடி இருக்கிறது. கதையோட்டத்திற்கு இணையாக தன்னை வேறுபடுத்திக்கொண்டு ஒளிப்பதிவில் காட்சிகளை காட்டியிருப்பது அருமை.
R சுதர்ஷன் படத்தொகுப்பின் மூலம் இயக்குனருக்கு கைகொடுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
இயக்கி தயாரித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் இந்த படத்தின் மூலம் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க எடுத்திருக்கும் முயற்சியை மனமுவந்து பாராட்டலாம்.
இந்த படத்திலும் குறைகள் இல்லாமல் இல்லை. பட்டியலிடுவதில்லை நமது வேலை. பட்டியல் இனத்தில் இருந்து ஜாதியை முற்றிலும் அகற்றுவதே தமிழ் குடிமகனின் வேலை என்று சொன்னதற்காக வரவேற்கலாம்.
தமிழ்க்குடிமகன் – தரம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!