76
இயக்குநர் பா. ரஞ்சித் , இயக்குநர் மாரி. செல்வராஜ் இரண்டு பேருமே எப்படியாவது என்னை வலுக்கட்டாயமாக திரையரங்கிற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள் .
காலதாமதமாகத் தான் படம் பார்ப்பது வழக்கம். எல்லோரும் பார்த்து விமரிசனம் எழுதிய பிறகு படத்தைப் பார்ப்பதற்கு நான் ஆர்வம் காட்டுவது பொதுவாக இல்லை. ஆனால் இந்த முறை எல்லோரும் சொல்லுகிறார்களே என்பதற்காக மாமன்னன் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தேன் .மாரி செல்வராஜ் படம் இயக்குவதில் மாமன்னன் தான் . பல படங்களில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தாலும் கூட காலம் காலமாக புரையோடி போயிருக்கக் கூடிய சாதிய ஆதிக்க மனம் ஆதிக்க அரசியல் இந்த சமூகத்திலே ஒரு சாராரை எப்படி அடக்கி ஒடுக்கிவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மிக நன்றாகப் புரிந்து கொண்டு நடித்திருக்கிறார்.
உண்மையிலேயே பன்றி குட்டிக்கு உணவுக் காய்ச்சுவதில் இருந்து பன்றி குட்டியை எடுத்து கொஞ்சுவதிலிருந்து காட்சிப்படுத்திய மாரி செல்வராஜ் ஆதிக்க எதிர் கதா பாத்திரம் ஃபாசில் பன்றியைக் கொன்று போட்ட காட்சிவரை வீராவாக உதயநிதியின் நடிப்பில் ஓர் அழுத்தம் தெரிகிறது. உதயநிதியின் நடிப்பில் மெருகேற்றி இருக்கிறார். மிக நன்றாகக்காட்சிப்படுத்தி இருக்கிறார் மாரி. தான் வளர்த்தப்பன்றிகளைக் கொன்று போட்ட ஆதிக்க மனநிலையை வேரறுக்க எழும் ஆவேசம் தான் படத்தின் நகர்வில் மையப்புள்ளி.அதை வெளிக்காட்டக்கூடிய உதயநிதியினுடைய நடிப்பு உண்மையிலேயே பாராட்டுதற்குரியது .
ஆர்ப்பரித்துக் கலவரம் செய்யாமல் நிதானமாக உணர்ந்து எதிர் தாக்குதலை நடத்தக்கூடிய விதத்தில் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைத்திருப்பது ஒரு கூர்மையான தலித் அரசியலினுடைய அறிவார்ந்த முன்னெடுப்பு..
1957 இல் மாவீரன்இம்மானுவேலுக்கு நிகராக சாதித்தலைவன் உட்காருவதா? என்ற ஆதிக்க மனதின் கொடூர அரசியல் அந்த வேட்டைக்குப்பலியான மாவீரன் இம்மனுவேல் மாமன்னன் படத்தில் வடிவேலுவை உட்காரச்சொல்லுவதும் அவர் மறுப்பதும் அதன் பின்னால் ஃபாசில் பேசும் வசனத்தில் நினைவுபடுத்தப்படுகிறது.அது இந்த தலைமுறை கவனத்திற்கானதுதான். திரையரங்கை விட்டு வெளிவரும் இளைஞர்கள் கேட்கிறார்கள் ஏன் வடிவேலு நாற்காலியில் உட்காரத்தயங்கினார். ? இதை ஒவ்வொரு வரும் கேட்கிறார்கள். கேள்வி கேட்டால்தான் பதில் கிடைக்கும் . அந்த காட்சியில் ஓர் ஆதிக்க சாதி முன்னால் ஒரு பட்டியல்சாதிக்காரர் ல் உட்காருவதா என்ற ஒரு கேள்வியை முன்வைத்து நடந்த அந்த வசனத்திலே இம்மானுவேல் நினைவுக்கு வருகிறார். மாமன்னாக வெற்றிப் பெற்று சபாநாயகராக சட்டசபையில் அமரக்கூடிய வடிவேலுவை அருந்ததியர் சமூகத்தினுடைய பிரதிநிதியாக தமிழக வரலாற்றில் எதிர்கட்சி அரசியலானதையும் பொருத்திக்காட்டி இருப்பது அபாரம் .
ஒற்றை நட்சத்திரமாக சனாதன எதிர்ப்பை மிகக் காத்திரமாக அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் இருவருடைய கருத்தியலோடு வலுவான எதிர் வாதத்தை பல மேடைகளிலும் சொல்லி தமிழ்நாட்டிலே சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் தன்னுடைய தொண்டை தண்ணி வற்றவற்ற பேச்சின் மூலமாக இந்த சமூகத்திற்குக்கடத்திக்கொண்டிருக்கும் பெரிய எழுச்சி தந்து கொண்டிருக்க கூடிய மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய முனைவர் தொல். திருமாவளவனுடைய அரசியல் பயணம் எதிர்காலத்திலே அது ஒற்றை நட்சத்திரமாக ஜொலிக்கும் என்பதைச் சொல்லுவதாகவும் படத்தில் பல காட்சிகள் அழகியலோடு சொல்லப்பட்டுள்ளன.
ஒடுக்கப்பட்ட சமூகத்துத் தெருவில் வாழக்கூடிய நாய்கள் மேலத்தெருவில் வாழும் நாய்களோடு புணர்வதையே ஏற்றுக்கொள்ள மனம் பக்குவப்படாத நோயாளிகளுக்கு மத்தியில் “நம்ம நிலைமை நல்லா இல்லன்னா நாய் கூட மதிக்காது” என்பதை எதிர்நிலைக் கதாபத்திரமாக நடித்திருக்கும் ஃபாசில் தோற்றுப் போன பிறகு அவர் வளர்த்த நாய்களே அவனைக் கடந்து செல்லுவதாக காட்டக்கூடிய அந்த காட்சி அற்புதம்.
செல்லப்பிராணியாக நாய்களை வளர்க்கக்கூடிய மேட்டுக்குடித்தன மக்கள் மத்தியிலே பன்றியைப் படுக்கையறையில் பக்கத்தில் வைத்துக் கொண்டு பாசத்தைக் காட்டுவதாக காட்சிப்படுத்தி இருக்கக் கூடிய மாரி. செல்வராஜ் கற்பனை என்பது நாங்கள் மலம் தின்னும் பன்றிகள் அல்ல ; அதிகாரத்தை வென்றெடுக்கும் பன்றிகள் .எத்தனைமுறை குத்திக்கிழித்துக் கொன்றுபோட்டாலும் மீண்டெழுவோம் என்று சொல்லுவதாகவே இருக்கிறது.
குதிரை பலம் என்பது நேர்மறை எண்ணங்களுக்குச் சொல்லுவது வழக்கம் . குதிரையில் பயணப்படக்கூடிய ஃபாசில் இறுதிக்காட்சியில் அரசியலில் தோற்றுப் போன பிறகு குதிரையிலிருந்து இறங்கி குதிரை தனியாக ஃபாசில் தனியாக நிற்கக்கூடிய காட்சியைப் பார்க்கும் பொழுது இனி அதிகாரத்தை நாங்கள் கையில் எடுக்கிறோம் : உன் சாதி ஆதிக்க அதிகாரம் தோற்றுப் போய்விடும், தோற்றுப் போய் இருக்கிறது என்று சொல்லுவதாகவே படுகிறது. தமிழகத்தினுடைய எல்லைப் பகுதியை வரையறுக்கும் பொழுது திருச்சி -தூத்துக்குடி வரையிலான பகுதிகளில் பள்ளர் சமூகம் அவர்கள் படும் இன்னல்கள், சாதிக்கலவரங்கள் அதை எதிர்த்து களப்போராளிகளாகக் களம் காணும் பள்ளர்கள், மேற்கு மண்டலத்திலே ஆதிக்கச்சாதிக்காரன்களின் அடாவடித்தனத்தால் நொந்து போன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அருந்ததியர்களின் அவலம், அதிகாரத்தை வென்றெடுக்கும் தூரம் தொலைந்து போனதில் இல்லை ,அருகில் இருக்கிறது என்று சொல்லுவதாகவே இருக்கிறது. எங்கெல்லாம் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் சாதிய வன்மம் தலைவிரித்து ஆடக்கூடிய வடஆற்காடு மாவட்டங்களில் ஆதிதிராவிடர்களின் குரல்வலையை நசுக்கக் கூடிய அதிகாரமையமாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஆதிக்கத்தினரின் திமிரை எதிர்த்துக் கலகக்குரல் கொடுக்கும் ஒற்றை நட்சத்திரமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமாவளவன் அவர்களுடைய எதிர்நீச்சல் எல்லாம் இந்த படத்தின் மைய அரசியல். இதுதான் மாமன்னன் என்ற இந்த படத்தின் செய்தி.
இழந்த வரலாற்றை மீட்டெடுக்கவேண்டிய காலத்தின் நெருக்கடி. அதற்குப் பின்னால் இயங்கக்கூடிய தீய சக்திகளை வேரறுக்கக் கூடிய ஒரு வேலையை அரசியல் மூலமாகத்தான் செயல்படுத்த முடியும். திமுக அரசு தலித்துகளுக்கு இந்த அரசியல் அதிகாரப்பகிர்வை அளிக்கவில்லை தரவில்லை என்று சொல்லக்கூடிய எதிர் கருத்தை உள்வாங்கி உதயநிதி மிகக் காத்திரமாக நடித்திருக்கிறார். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். வரும் காலம் அவருடைய அரசியல் பயணத்திலே இந்த மாமன்னன் திரைப்படம் அவரையும் மாமன்னனாகவே பார்க்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன காட்சிகள்.
தீண்டாமையை காட்சிப்படுத்தக்கூடிய காட்சிகள் நுண்ணரசியாலனவை. கிணற்றிலே குழந்தைகளைக் கல்லால் அடித்துக் கொல்லுவது என்பது கொஞ்சமும் ஈரம் இரக்கமில்லாதவர்களுடைய வக்கிரமான செயலல்.
இன்குலாப் அவர்கள் மனுஷங்கடாஎன்ற பாடலில்
“உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்?
கிணத்துத் தண்ணியும் சாதி எழவ எழுதிக் காட்டுமா?-
எங்க குழந்தைக்கெல்லாம் உங்க சாதி விவரம் எட்டுமா?
குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது…?
சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க?
— டேய் மனுசங்கடா நாங்க மனுசங்கடா
நாங்கள் மனுஷங்கடா என்ற பாட்டிலே கிணற்றிலே ஒடுக்கப்பட்ட சமூகத்தினுடைய குழந்தைகள் குளித்த பொழுது மின்சாரம் பாய்ச்சி இறந்து போனதை நினைவுப்படுத்தி அவர் எழுதியிருப்பார். இந்த கலவரம் தான் ஒரு விடுதலைக்கான கலகக் குரலாக மாறியிருக்கிறது .
உரிமைகள் மறுக்கப்படும் பொழுதெல்லாம் கிளர்ந்து எழ வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறது. தீண்டாமை என்பது பாவம் என்று சட்டம் சொன்னாலும் அதை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையிலே “உன்னுடைய அப்பாவை நிற்கச் சொல்லுவது எங்களுடைய அடையாளம் :உன்னை உட்காரச் சொல்லுவது என்னுடைய அரசியல்” என்று சொல்லக்கூடிய அந்த ஒற்றை வசனம் திரைப்படத் துறையிலே மிகுந்த உயிரோட்டம் உள்ள ஒரு வசனமாக அமைந்திருக்கிறது.
இதை மாற்றுவது தான் ஒரு விடுதலை அரசியலாக இருக்க முடியும். இந்த மாற்றத்தைக்கொண்டுவர சாதிப்பற்றாளர்கள் விடமாட்டார்கள்.
விடுதலையை வென்றெடுப்பதுதான் அரசியல் அதிகாரம். அதற்குச்சமூக அதிகாரம் தேவை.அதற்குத் இளைய தலையினரின் அரசியல் புரிதல் அவசியம்.அப்பாவாக நடித்திருக்கக்கூடிய வடிவேலு ஒவ்வொரு படத்திலும் ஒரு கேலிச் சித்திரமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அடி வாங்கி பிறரை மகிழ்வித்த அந்த வடிவேலு இனி வரக்கூடிய காலங்களில் ஒரு நாயகனாக விஸ்வரூபம் எடுப்பதற்கான விதையை மிகநேர்த்தியாக இந்தப்படத்தில் தடம் பதித்திருக்கிறார். மாமன்னனாக நடித்திருக்கும் வடிவேலு அவருடன் இணைந்த உதயநிதி ஆகிய இருவரின் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அவர்களுக்குத்திருப்புமுனைதான்.
இந்தப்படத்தின் திரைக்குப்பின் உழைத்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.மாரி.செல்வராஜுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
முனைவர் அரங்கமல்லிகா