சினிமாவிமர்சனம்

குழந்தைகள் உலகில் ராஜபாட்டையுடன் கம்பீரமாக பயணிக்கிறது “ஷாட் பூட் திரீ”

191views
‘ஷாட் பூட் திரீ ‘ – திரை விமர்சனம்:
யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்து இருக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம் “ ஷாட் பூட் திரீ “
இது குழந்தைகளுக்கான படம் என்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் நேர்த்தியான திரைப்படமாக உருவாக்கி இருக்கும் திரைக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.
நான்கு பசங்க ஒரு நாய். இவர்களை வைத்துக்கொண்டு சமூக அக்கறையுடன் கூடிய கதையை ஜனரஞ்சகமாக சொல்ல வந்திருக்கிறார் அருணாச்சலம் வைத்தியநாதன்.

சியாமளா – சுவாமிநாதன் இவர்களின் மகன் கைலாஷ். மிகப்பெரிய பதவிகளில் இருக்கும் இருவருக்கும் மகனுடன் செலவழிக்க நேரம் கிடைப்பதில்லை. தான் தனியாக இருப்பதின் வெறுமையை உணரும் தருணத்தில் தனக்கு ஒரு தம்பி இருந்தாலாவது நல்லது என பெற்றோர்களிடம் கேட்கிறான் கைலாஷ். இருக்கும் வேலை சூழலில் அதெல்லாம் சாத்தியமில்லை என மறுதலிக்கும் போது ஒரு பெட் வளர்க்க முடிவெடுக்கிறான். அதுவும் நாய்க்குட்டி ஒன்றை வளர்க்க ஆசைப்படும் நிலையில் அதற்கு தான் ஒருபோதும் சம்மதிக்க முடியாது என சியாமளா திட்டவட்டமாக சொல்லி விடுகிறார்.
இந்த நிலையில் கைலாஷின் நண்பர்கள் பல்லு என்கிற பல்வீந்தர், பல்லவி, மற்றும் ரமணா என அனைவரும் சேர்ந்து அவனுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு நாய்க்குட்டியை கொடுக்கின்றனர். அதற்கு மாக்ஸ் என பெயர் வைக்கின்றனர். மாக்ஸ் வீட்டிற்கு வந்ததை அரைமனதாக பெற்றோர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். பெற்றோர்கள் இருவரும் வெளியூர் செல்லும் சூழலில் நண்பர்களுடன் வீட்டில் இருக்கும் நேரத்தில் மாக்ஸ் தொலைந்து விடுகிறது.

அதற்கு பிறகு அவர்களை என்ன செய்தார்கள். மாக்ஸை கண்டுபிடித்தார்களா. அவர்களின் தேடலில் என்ன சிக்கல்களை எதிர் கொண்டார்கள் போன்ற பல சந்தேக வினாக்களுக்கு சுவாரஸ்யமான காட்சி பின்னணிகளுடன் பெரியவர்களும் ரசிக்கும்விதமாக பதில்களை சொல்லி இருக்கிறது திரைப்படம்.
சியாமளாவாக சினேகாவும், சுவாமிநாதனாக வெங்கட் பிரபுவும் நடித்திருக்கின்றனர். இவர்களின் மகனாக கைலாஷாக கைலாஷ் ஹீட் நடிக்க அவனின் நண்பர்களாக பல்லுவாக வேதாந்த் வசந்த, பல்லவியாக பிரணிதி, ரமணாவாக பூவையார் நடித்திருன்றனர்.
தலை குமாராக யோகிபாபு ஆட்டோ டிரைவராக வருகிறார். மனிதர் வரும் இடங்களில் எல்லாம் நகைச்சுவையால் தியேட்டர் குலுங்குகிறது. சாய் தீனாவின் பைரவா பாத்திரப் படைப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. டெல்லிகணேஷ், வையாபுரி, கவிதாலயா கிருஷ்ணன், என ஒரு சிலரை படத்தில் பார்க்க முடிகிறது. ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் குறை வைக்கவில்லை. சீனியர்ஸ் ஆல்வேய்ஸ் சீனியர்ஸ் தான். பர்பெக்ட் ஆக்டிங்க்.
சிவாங்கி, ‘பெட்’ ரேவதி கதாபாத்திரத்தில் சமூக சேவை பேசுகிறார். தெரு நாய்களுடன் அவர் வரும் காட்சிகளில் நம்மையும் அறியாமல் கைத்தட்டி விடுகிறோம்.
சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு துணையாக இருக்கிறது. குழந்தைகளுக்கான படம் என்பதால் காட்சிகளில் கூடுதல் அக்கறை வெளிப்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.
பரத் விக்ரமனின் படத்தொகுப்பு சிறப்பு. வெட்டி ஒட்டுவதில்லை ஒரு எடிட்டரோட வேலை. கதையை ஓடவிட்டு கட் அண்ட் பேஸ்ட் வேலைக்கு குட் பை சொல்லியிருப்பதை அனுமானிக்க முடிகிறது. நல்ல படத்திற்கு எடிட்டிங்க் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மதன் கார்க்கி எழுதிய ‘பால் மழையின் தூறலில் வால் முளைத்த வானவில்’ பாடல் சித் ஸ்ரீராமின் இன்னொரு மகுடம்.
இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் பிரபல வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா தொடர்ந்து இசையமைப்பாளராக வலம் வரலாம். மனிதர் பின்ணணி இசையிலும் பாடல்களிலும் தாறுமாறு தக்காளி சோறுதான். ஆனால் வீணையை தொடாமல் ஒரு பீஸ் கூட கேட்க முடியவில்லை. வீணை இல்லாத ராஜேஷ் வைத்யா ..வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை. கொண்டாடலாம் மனிதரை.
முதல் காட்சியில் நிமிர்ந்து அமரவைக்க கையாண்ட யுக்தியை கடைசி காட்சியில் பல்லு தத்தெடுக்கும் நாய்க்குட்டி வரை ஒவ்வொரு காட்சி செதுக்கலிலும் கவனமாக கொண்டுவர முயற்சி எடுத்திருக்கும் அருணாச்சலம் வைத்தியநாதன் பாராட்டுக்குரியவர். ஒரு இயக்குனராக குழந்தைகள் உலகில் ராஜபாட்டையுடன் கம்பீரமாகவே பயணிக்கிறார் மனிதர்.
அப்பாட்மென்ட் குழந்தைகளுக்கான உலகில் அன்பும் பாசமும் எந்த அளவிற்கு கலந்திருந்தது என்பதை எதார்த்த கதைக்களத்துடன் சொல்ல வந்திருக்கும் ‘ஷாட் பூட் திரீ ‘ குழந்தைகளுடன் குழந்தையாக பெரியவர்களும் திரையரங்கில் பாப்கார்ன் வாசத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!