சினிமா

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

21views
இணையத்தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது இயல்பான தோற்றத்தாலும் வசீகரமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஏகன். இந்நிலையில், யுவராஜ் சின்னசாமி எழுத்து இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள ’ஹைக்கூ’ திரைப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் கல்லூரி மாணவனாக இருந்து, முதிர்ச்சியடைந்த குடும்பத் தலைவனாக மாறும் ஒரு கதாபாத்திரத்தில் ஏகன் நடித்துள்ளார். கல்லூரிப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், இளமைத் துடிப்பு மிக்க காதல், நகைச்சுவை ஆகியவற்றுடன் கதாபாத்திரங்களின் மாறிவரும் கண்ணோட்டங்கள் மற்றும் உறவுகளையும் மையப்படுத்தி பேசியுள்ளது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஏகன் பகிர்ந்து கொண்டதாவது, “எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் திரைப்படமாக ‘ஹைக்கூ’ இருக்கும் என்று நம்புகிறேன். கல்லூரி மாணவனாக இருக்கும் எனது கதாபாத்திரம், முதிர்ச்சியடைந்த குடும்பத் தலைவனாக மாறுவதைத் திரையில் கொண்டு வருவது எனக்கு சவாலாக இருந்தது. ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் இருவரும் அற்புதமான நடிகைகள். இப்படத்தில் பல உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருவரும் அந்தக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
சித்து குமாரின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் பல உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு அவரது இசை மேலும் பலம் சேர்த்துள்ளது. நகைச்சுவை மற்றும் காதலைத் தாண்டி, ‘ஹைக்கூ’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான பல விஷயங்கள் உள்ளன. அதனுடன் ரசிகர்கள் நிச்சயம் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோரின் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் ‘ஹைக்கூ’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அதிர்ச்சி அருண், சுப்பிரமணியன் சேது, அதியமான், மைம் கோபி மற்றும் இந்துமதி மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்து குமாரின் இசையில் உருவான பாடல்கள், ஏற்கெனவே ஆடியோ தரவரிசையில் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளன. பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார்.
‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் பி, இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!