ஆன்மிகம்

ஸ்ரீ ராம நவமியின் சிறப்பு

183views
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று ஸ்ரீ இராமநவமி. பகவான் மஹா விஷ்ணு பூலோகத்தில் அதிகமாக அக்கிரமங்கள் நடக்கும் போது தீய செயல்களில் இருந்து பூலோகத்தை காப்பாற்றுவார். வைகுண்டத்தில் வாசம் செய்யும் பகவான் விஷ்ணு தசாவதாரம் எடுத்து கெட்டவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்றுகிறார். அதன்படி பகவான் தசாவதாரம் எடுத்து ஒவ்வொரு முறையும் பூமியை காப்பாற்றுகிறார். அதனால் தான் அவருக்கு காக்கும் கடவுள் என்று நாம் அழைக்கிறோம். தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமாவதாரம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இராவணனை அழிப்பதற்காகவே ஸ்ரீ ராமர் ரகு வம்சத்தில் ஜனனம் எடுத்தார். ‘ஒரு சொல், ஒரு வில் ,ஒரு இல் ‘என்பதனை உலகிற்கு உணர்த்துவதற்காகவே எடுக்கப்பட்ட அவதாரமே ஸ்ரீ ராம அவதாரம் ஆகும்.
ராமர் சைத்ரமாதம் (பங்குனி/ சித்திரை) புனர்பூசம் நட்சத்திரத்தில், வளர்பிறை நவமி என்று அன்று அவதரித்தார். அதனால் அன்று ஸ்ரீ ராம நவமி என்று கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் விரதம் இருந்து, ராமாயணம் படித்து அல்லது சுந்தரகாண்டம் படித்து, பஜனை செய்து, பெருமாளுக்கு பானகம், நீர் ,மோர், வட பருப்பு (ஊறவைத்த பாசிப்பருப்பு), மற்றும் பழங்கள் போன்றவை நிவேதனம் செய்து வழிபடுவது வழக்கம். ராமர் கோவில்கள் இருக்கும் இடங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். ராமர், சீதை ,லட்சுமணர், அனுமாருக்கு பட்டாடை மற்றும் ஆபரணங்கள் சாத்தி உற்சவம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
மதுராந்தகத்தில் “ஏரி காத்த ராமர் கோயிலில்” கோதண்ட ராமருக்கு சிறப்பாக தொட்டி திருமஞ்சனம் நடைபெறும். ஸ்ரீ ராம நவமி உற்சவத்தன்று பெரிய பெருமாள் இரவு வெள்ளித்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மதுராந்தகத்தை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து வந்து பக்தர்கள், வெள்ளித்தேரில் பெருமாளை தரிசிப்பதற்காக கூட்டம் கூட்டமாக வருவார்கள். அயோத்தி, ராமேஸ்வரம், பத்ராச்சலம் போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து ராமர் கோயில்களிலும் ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் அன்றைய தினத்தில் கோவிலுக்கு சென்று ஸ்ரீ ராமனை வழிபடுவதால் தங்கள் பிரச்சனைகள் எல்லாம் நீங்கி வாழ்வில் வளம் பெறுவோம் என்று நம்புகிறார்கள். இந்த உற்சவம் ஒவ்வொரு வருடமும் கோயில்களில் கொண்டாடப்படுகிறது.
எம். எல் .பிரபா, ஆதம்பாக்கம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!